நோர்வேயில் நடந்த பொதுத்தேர்தல் வாக்காளர்கள் இடதுபக்கமாகத் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.
செப்டெம்பர் 13 ம் திகதியன்று நோர்வேயில் நடந்த பொதுத் தேர்தலில், எட்டு வருடமாக நாட்டை ஆண்ட வலதுசாரிக் கட்சிகளின் கூட்டாட்சியை வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் கட்சித் தலைவர் (Jonas Gahre Store) யூனாஸ் காஹர் ஸ்டொரெயின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பாராட்டினார் பதவியிலிருந்து விலகும் பிரதமர் எர்னா சூல்பெர்க்.
தொழிலாளர் கட்சித் தலைவரானாலும் பெரும் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்த 61 வயதான யூனாஸ் காஹர் ஸ்டொரெ நீண்ட கால அரசியல்வாதியாகும். அக்கட்சியின் முன்னாள் ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவர் நோர்வேயின் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பினும் அவரது கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தோல்வியடைந்த எர்னா சூல்பெர்கின் கட்சி கடந்த தேர்தலை விட 4.5 % வாக்குகளை இழந்து 20.5 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது. வெற்றிபெற்ற தொழிலாளர் கட்சியும் 1 % வாக்குகளைக் குறைவாகப் பெற்று 26.4% வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியின் சகக் கட்சி முன்னரை விட அதிக வாக்குகளைப் பெற்றிருக்க, மார்க்ஸிஸ்ட் கட்சி முதல் தடவையாக 4.7% வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்குள் நுழைகிறது. அதே சமயம் ஆட்சியிலிருந்த வலதுசாரிக் கட்சியின் சகாக் கட்சி பாராளுமன்றத்துக்குள் நுழையும் 4 % விகித வாக்கு எல்லையைத் தாண்டவில்லை.
தேர்தல் காலம் ஆரம்பித்ததிலிருந்தே நோர்வேயில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றத்துக்கெதிரான நடவடிக்கைகள், சமூக சமத்துவத்துக்கான நடவடிக்கைகள் இத் தேர்தலில் முக்கிய விடயங்களாகக் குறிப்பிடப்பட்டன. வரவிருக்கும் யூனாஸ் காஹர் ஸ்டொரெயின் அரசில் அவைகளுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்