ஜனாதிபதி கொலை பற்றிப் பிரதமரை விசாரிக்கக் கோரிய பொது வழக்கறிஞரை வீட்டுக்கனுப்பினார் பிரதமர்.
ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டபின் இதுவரை அதற்குப் பின்னாலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுவரை 44 பேர் அக்கொலை பற்றி விசாரணைசெய்யப்படுவதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் அமெரிக்க, கொலம்பியக் குடிமக்கள் 20 பேரும் அடக்கம்.
தான் கொலைசெய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் தற்போது நாட்டை ஆளும் பிரதமர் ஏரியல் ஹென்ரி பிரதமராக ஜோவனல் மொய்ஸியால் நியமிக்கப்பட்டார். அவரை விசாரணை செய்வதானால் அது நாட்டின் ஜனாதிபதி உத்தரவால் மட்டுமே முடியும். தொடர்ந்தும் நாட்டில் ஒரு ஜனாதிபதி இல்லாமையால் தன்னை விசாரணைக்கு உட்படுத்தக் கோரும் அதிகாரம் நாட்டின் தலைமை வழக்கறிஞருக்குக் கிடையாது என்கிறார் பிரதமர்.
ஜனாதிபதி கொலை நடந்த குறுகிய நேரத்தின் பின்னர் அக்கொலையில் சம்பந்தமுள்ளவரென்று தேடப்படுபவர் ஒருவருடன் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே நாட்டின் பொது வழக்கறிஞர் பெட் போர்ட் கிளௌட் பிரதமரை விசாரிக்கக் கோரி நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருக்கிறார். அத்துடன் பிரதமருக்கும் அக்கொலைக்கும் இடையே சம்பந்தமிருக்கும் என்று பலமான நம்பிக்கை இருப்பதால் அவரை ஹைட்டிதை விட்டு வெளியேறாமல் தடுக்கும்படியும் கோரியிருக்கிறார்.
“என்னை விசாரிக்கவேண்டும் என்று சந்தேகமெழுப்புவதெல்லாம் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமலிருக்கச் செய்யும் தந்திரங்களே. நாம் அவர்களை நிச்சயம் கண்டுபிடிப்போம்,” என்கிறார் பிரதமர் ஏரியல் ஹென்ரி.
சாள்ஸ் ஜெ. போமன்