கோடையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் அல்பேர்ட்டாவின் முதலமைச்சர்.
கனடாவின் அல்பேர்ட்டா மாநிலத்தில் நாலாவது அலையாகப் பரவி வருகிறது கொவிட் 19. நாட்டிலிருக்கும் 218 மருத்துவ அவசரகால இடங்களுட்பட 877 பேர் அவ்வியாதிக்காகச் சிசிக்சை பெற்று வருகிறார்கள். நேற்றைய தினம் அந்த மாநிலத்தில் மிக அதிகமானவர்கள் [24 இறப்புகள்] ஒரே நாளில் இறந்த நாளாகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜேசன் கென்னி தனது அரசு கோடை காலத்திலேயே கொவிட் 19 கட்டுப்பாடுகளை நீக்கியது தவறு என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கனடா முழுவதும் சுமார் 70 விகிதமானவர்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளிரண்டையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அல்பேர்ட்டா மாநிலம் அவ்விடயத்தில் பின்தங்கியிருக்கிறது. அங்கே 60 விகிதமானவர்களே தடுப்பூசிகளைப் போட்டுகொண்டிருக்கிறார்கள். கனடாவிலேயே அந்த மா நிலத்தில்தான் தடுப்பூசியைப் போட மறுப்பவர்கள் அதிகம். ஒரு குழுவினர் மருத்துவசாலையொன்றின் முன்னால் இவ்வாரமும் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.
நாலரை மில்லியன் மக்களையே கொண்ட அல்பேர்ட்டாவில் அதைப் போல மூன்று மடங்கு அதிக மக்கள் தொகைகொண்ட ஒன்ராரியோ மாநிலத்தைவிட இரண்டு மடங்கு அதிக கொவிட் 19 நோயாளிகள் மருத்துவ சாலைகளில் இருக்கிறார்கள். அவர்களில் 90 விகிதமானோர் தடுப்பு மருந்து எடுக்காதவர்களாகும். மருத்துவசாலைகளின் பெரும்பாலான மற்றைய சத்திர சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மாநிலத்தின் 75 விகிதமான பாலர் மருத்துவ சேவைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
மாநிலத்தில் மீண்டும் கொரோனாக் கட்டுப்பாடுகள் பல அமுலுக்கு வந்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்