சர்வதேசக் குத்துச்சண்டைக் கோப்பையைப் பத்துத் தடவைகள் வென்றவர் பிலிப்பைன்ஸில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகிறார்.
பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாரென்ற இழுபறியில் ஆளும் கட்சியான PDP-Laban க்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் ஒரு பகுதியார் குத்துச்சண்டை வீரர் மன்னி பக்குவாயோவை வேட்பாளராகப் பிரேரித்திருக்கிறார்கள்.
பக்குவாயோ தனது குத்துச்சண்டை வெற்றிகளால் நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் அரசியலில் இன்னும் பலமாகவில்லை. நீண்ட காலமாக ஜனாதிபதி டுவார்ட்டேயை ஆதரித்து வந்தவர் பக்குவாயோ. சமீப மாதங்களில் அவர் டுவார்ட்டேயை ஊழல்காரரென்றும், சீனாவுக்குப் பயந்து முடிவெடுப்பவரென்றும் விமர்சித்து வந்ததால் ஆளும் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறார். பக்குவாயோ 2016 லிருந்து செனட்டராக இருந்து வருகிறார்.
பக்குவாயோவுக்கு எதிராக டுவார்ட்டோ ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் காரியதரிசி கிறிஸ்தோபர் பொங் கோ வை வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறார்கள். அவர் டுவார்ட்டேயின் பினாமி என்று கருதப்படுகிறார்.
ஆனாலும், இதுவரை வேட்பாளராக நிற்க மறுத்துவரும் டுவார்ட்டேயின் மகள் சாரா டுவார்ட்டே-கார்ப்பியோ ஆதரவுக் கணிப்புகளில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் மிண்டானாவோ தீவின் டாவோ நகர ஆளுனராக இருக்கிறார். தனது தந்தை ஜனாதிபதியாக முன்பு அலங்கரித்த அப்பதவியிலேயே தான் தொடர விரும்புவதாகச் சொல்லி வருகிறார் சாரா.
சாள்ஸ் ஜெ. போமன்