“AUKUS ஆகவோ JAUKUS ஆகவோ JAIAUKUS ஆகவோ மாறாது. அதற்குள் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லை.”
ஆஸ்ரேலியாவுடனும், ஐக்கிய ராச்சியத்துடனும் அமெரிக்கா கைகோர்த்து உண்டாக்கும் AUKUS என்ற இந்தோ – பசுபிக் சமுத்திரப் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லையென்பதில் தெளிவாக இருக்கிறது அமெரிக்கா. QUAD என்றழைக்கப்படும் ஆஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இந்தோ – பசுபிக் சமுத்திர கூட்டுறவு அமைப்புக்கும் AUKUS க்கும் வித்தியாசமான நோக்கங்கள் இருக்கின்றன என்கிறது அமெரிக்கா.
“குவாட்” ஒரு திறந்த இந்தோ – பசுபிக் சமுத்திர பிராந்தியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தும். அது 2017 இல் ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஷோ ஆபேயின் முயற்சியால் நிறுவப்பட்டது. அதன் நோக்கம் அப்பிராந்தியத்திலிருக்கும் நாடுகளுக்கு சீனா கொடுக்கும் தொந்தரவுகளை எதிர்கொள்ள உதவுவதாகும்.
“குவாட் அமைப்பின் கூட்டத்தில் பங்குபற்ற அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடனும் AUKUS அமைப்பில் சேர்ந்து அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொறுப்புக்கள் கொடுக்கப்படுமா?” என்று வெள்ளை மாளிகையின் காரியதரிசி ஜென் பக்ஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் “AUKUS ஆகவோ JAUKUS ஆகவோ JAIAUKUS மாறாது,” என்றார்.
AUKUS கூட்டுறவு பற்றி அறிவிக்கப்பட்டதால் பிரான்ஸைத் தவிர சீனாவும் எரிச்சலடைந்தது. அப்படியான ஒரு பிரத்தியேக பாதுகாப்பு அமைப்பு இந்தோ-பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை உண்டாக்கி, நாடுகள் பெருமளவில் ஆயுதங்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடவே தூண்டும், என்று சீனா குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்