இந்தோ-பசுபிக்கில் பிரான்ஸுடன் கைகோர்க்க தயாராகிறது இந்தியா.

மக்ரோனுடன் மோடி உரையாடல்நீர்மூழ்கிகளை இந்தியா வாங்கும்?

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸுடன் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த விதத்திலும் நெருங்கிச் செயற்படுவதற்கு இந்தியா தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறது.

அதிபர் மக்ரோனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இடம்பெற்றுள்ள தொலைபேசி உரையாடல் ஒன்றில் பசுபிக்கில் இரு நாடுகளும் கைகோர்த்துச் செயற்படுவதற்கு பரஸ்பரம் தங்கள் விருப்பத்தைப் பரிமாறியுள்ளனர் – எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரான்ஸுடனான நீர்மூழ்கி ஒப்பந்தத்தை திடீர் என்று முறித்துக்கொண்டதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய முத்தரப்புகளுடனான பாரிஸின் உறவுகள் பெரும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் மக்ரோனும் மோடியும் தொலைபேசி வழியாக உரையாடி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இரு தலைவர்களினதும் உரையாடலுக்குப் பின்னர் எலிஸே மாளிகை வெளியிட்ட தகவலில், நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலான நெருங்கிய உறவின் ஒரு பகுதியாக இந்தியாவின் தொழில் மூலோபாயத் தன்னாதிக்கத்தை வலுப்படுத்த பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான பிரான்ஸின் பரஸ்பர உறவு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. அதேநேரம் எந்த விதமான மேலாதிக்கங்களையும் அது நிராகரிக்கிறது -என்றும் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலைவரம் தொடர்பாக இரு தலைவர்களும் தமது கவலைகளையும் கரிசனைகளையும் பரிமாறிக்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட ருவீற்றர் பதிவு ஒன்றில் மக்ரோனைத் தனது நண்பர் என்று (my friend) குறிப்பிட்டு எழுதியுள்ளார். “பிரான்ஸுடனான தனது மூலோபாயப் பங்களிப்புக்கு இந்தியா உயர்ந்த இடமளித்துள்ளது”என்றும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீர்மூழ்கி விவகாரத்தால் உறவுகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியைச் சீர்செய்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் சில தினங்களில் மக்ரோனுடன் பேச்சு நடத்துவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்கு முன்பாக மக்ரோன் – மோடி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், பிரான்ஸுடன் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா முறித்துக் கொண்டுள்ள பின்னணியில் புதியதோர் ஒப்பந்தம் ஊடாக அந்த நீர்மூழ்கிகளை இந்தியா வாங்கக் கூடும் என்ற ஊகங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

அண்மைய ஆண்டுகளில் பாரிஸுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகின்ற இந்தியா ஏற்கனவே பல பில்லியன் டொலர் பெறுமதிக்கு பிரான்ஸின் 36 ராபேல் போர் விமானங்களை(Rafale fighter jets) வாங்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

இதேவேளை, ஆஸ்திரேலியா நீர்மூழ்கி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதில் வெளிப்படையாகவும் விதிமுறைப்படியும் நடந்து கொண்டதாக அந்நாட்டின் தலைவர்கள் கூறியிருப்பதை நிராகரித்துள்ள பிரான்ஸின் ஆயுதப்படைகளது அமைச்சர் புளோரன்ஸ் பார்லே, பிரான்ஸுடன் உடன்பட்ட விடயங்களில் ஆஸ்திரேலியா கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை உறுதியாக இருந்தது என்பதற்கான ஆவண ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோசி, ஆஸ்திரேலிய விவகாரத்தில் தூதர்களைத் திருப்பி அழைத்தமை உட்பட ராஜீக மட்டத்தில் அதிபர் மக்ரோன் எடுத்த திடமான முடிவுகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *