“உங்கள் மிரட்டலை 48 மணிக்குள் மீளப்பெறுங்கள், இல்லையேல் ……..” பிரான்ஸ் மீது பாயும் பிரிட்டன்.
பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் தமக்கிடையே இருக்கும் நீர்ப்பரப்பில் மீன் பிடிப்பதில் ஏற்பட்டிருக்கும் இழுபறியால் பிரான்ஸ் – பிரிட்டன் நாடுகளுக்கிடையே மனக்கசப்பு அதிகமாகி வருகிறது.
“பிரான்ஸ் எங்களைத் தண்டிக்கப் போவதாக மிரட்டியிருப்பது சகிக்க முடியாதது. அந்த மிரட்டலை அவர்கள் 48 மணி நேரத்துக்குள் திரும்பப் பெறவேண்டும்,” என்று பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் லிஸ் டுருஸ் திங்களன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
சில மாதங்களாகவே இரண்டு நாடுகளுக்கும் அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வைக் குறைப்பதற்காக ரோமில் நடந்த G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமரும், பிரெஞ்சு ஜனாதிபதியும் சந்தித்து அளவளாவினார்கள். அவர்களிருவருமே அப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண விரும்புவதாகக் குறிப்பிட்டார்கள்.
அந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சமயத்தில் அவர் பிரிட்டன் தனது நடவடிக்கைகளைத் திருத்திக்கொள்ளவேண்டும் இல்லையேல் அந்த நாட்டு மீனவர்கள் மீதான எல்லைக் காவல்கள் தீவிரப்படுத்தப்படும், அவர்கள் சில பிரெஞ்சுத் துறைமுகங்களில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் மீனவர்கள் பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் பிரிட்டிஷ் நீர்ப்பரப்பில் மீன்பிடிக்கப் பிரத்தியேக அனுமதி பெற்றிருப்பதாகப் பிரான்ஸ் குறிப்பிடுவதே இப்பிரச்சினையின் அடிப்படையாகும். அப்படியொரு அனுமதியும் பிரான்ஸுக்குக் கொடுக்கப்படவில்லை, அதைச் செய்யுமானால் பிரான்ஸை உடன்படிக்கை மீறலுக்காக நீதிமன்றத்துக்கு இழுப்போம் என்கிறது ஐக்கிய ராச்சியம்.
சாள்ஸ் ஜெ. போமன்