பவளப்பாறைகளைப் பாதுகாத்துப் பேணுவதில் இந்தோனேசியாவின் முயற்சி மெச்சப்பப்படுகிறது.
மோசமான வகையில் உலகக் காலநிலை மாறிவரக் காரணமான முக்கிய நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா இடம்பெறுவது வழக்கம். அழிந்தால் மீண்டும் உருவாகாது என்று கருதப்படும் இயற்கை வளங்களிலொன்றான பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது இந்தோனேசியா.
வேறு பல இயற்கை வளங்களைப் பேணுவதிலும், சீர்திருத்துவதிலும் பின் தங்கியிருக்கும் இந்தோனேசியா தன் எல்லைக்குள்ளிருக்கும் பவளப்பாறைகளைப் பாதுகாக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சர்வதேச கடல்வள ஆராய்ச்சியாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.
சுமார் 500 இடங்களில் பவளப்பாறைகளைச் சீர்திருத்திப் பேணும் திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது இந்தோனேசியா. 30 மில்லியன் ஹெக்டார் பிராந்தியத்தில் பவளப்பாறைப் பேணும் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது அந்த நாடு. காலநிலை மாற்றங்கள், முறையின்றி மீன்பிடித்தல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் காணப்பட்டிருக்கும் பவளப்பாறைகள் மீது உலகெங்கும் சமீப காலத்தில் கவனம் திரும்பியிருக்கிறது. ஆனாலும், அவைகளில் மிக அதிகமான, திறமையான முறைகளில் ஈடுபடும் முதல் நாடாக இந்தோனேசியா ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தோனேசியா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகளையொட்டிய கடற்பரப்பு வெம்மையாகி வருவதால் பவளப்பாறைகள் அழியும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தோனேசியாவின் பவளப்பாறைகளில் சேதங்கள் குறைவாகவே இருப்பதைக் காட்டுகின்றன. அதற்குக் காரணம் அந்த நாடு எடுத்திருக்கும் நடவடிக்கைகளே என்று குறிப்பிடப்படுகிறது.
உலகிலுள்ள பவளப்பாறைகளில் மூன்றிலொரு விகிதமானவை இந்தோனேசியப் பிராந்தியத்திலேயே காணக்கிடைக்கிறது. அதைத் தவிர ஆஸ்ரேலியாவை அடுத்தும் Great Barrier Reef என்றழைக்கப்படும் மிகவும் பிரபலமான பவளப்பாறைகள் இருக்கின்றன. ஆஸ்ரேலியாவின் பகுதியிலிருப்பவை அழிவை நோக்கி நகர்ந்துவருவதால் அவைகளைத் திருத்துவதற்காக ஆஸ்ரேலியா சுமார் 72 மில்லியன் டொலர் செலவிலான திட்டங்களை ஆரம்பித்திருக்கிறது.
இந்தோனேசியாவின் பவளப்பாறைகளின் நிலையைக் கவனித்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்ரேலியாவிலும் சீர்திருத்தங்களைச் செய்வதற்காக இந்தோனேசியாவிடம் அறிவுரை கேட்க ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்