உள்நாட்டுப் போரின் விளிம்பை எத்தியோப்பியா என்ற பல்லினத்தவரைக் கொண்ட நாடு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
தனது பதவியேற்றத்தின் பின்னர் எடுத்த நடவடிக்கைகளால் சர்வதேச மதிப்பைப் பெற்று நோபலின் அமைதிப் பரிசையும் வென்ற அபிய் அஹமதின் அரசியல் தேனிலவுக் காலம் முடிந்து ஒரு வருடமாகிவிட்டது. திகிராய் மாநிலத்தின் மீது அவர் அறிவித்த போரும் அதன் பின்னர் நடந்த இன ஒழிப்பும் எத்தியோப்பியா என்ற நாட்டையே உடைக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக அரசியல் அவதானிகள் ஒரு வருடமாகவே எச்சரித்து வருகிறார்கள்.
எத்தியோப்பியாவின் தேசிய இராணுவத்தினரால் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட திகிராய் விடுதலை அமைப்பினர் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமன்றி அபிய் அஹமதின் ஆட்சியையே ஒழித்துக் கட்டுவதாக உறுதிபூண்டிருக்கிறார்கள். அவர்களுடன் கைகோர்த்து ஆட்சியை வீழ்த்த மேலும் ஒன்பது அமைப்பினர் திகிராய் விடுதலைப் போராளிகள் இயக்கத்துடன் ஒன்றுபட்டிருப்பதாக வெள்ளியன்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எத்தியோப்பியாவின் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் அமைப்புக்களே அபிய் அஹமதுவின் ஆட்சியை வீழ்த்தி நாட்டைக் காப்பாற்றுவதாகச் செய்திகள் குறிப்பிட்டிருக்கின்றன. ஒன்றுபட்ட எத்தியோப்பிய போராளிகள் என்று தங்களைக் குறிப்பிட்ட அவர்களின் மேலதிகள் விபரங்கள், குறிக்கோள்கள் பற்றி எதுவும் தெரியவில்லை.
அபிய் அஹமது நாடு முழுவதும் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியிருக்கும் தருணத்தில் எதிரணி தலைநகரை நோக்கி நகர்வதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. நிலைமை மோசமாகும் என்று அஞ்சும் பல வெளிநாட்டவர்கள் எத்தியோப்பியாவில் வாழும் தமது குடிமக்களை வேகமாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா, இத்தாலி, டென்மார்க், பின்லாந்து உட்பட பல நாடுகள் தமது வெளிவிவகார அலுவலகங்கள் மூலம் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து தம் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. போர் ஆரம்பிக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி கேட்டிருக்கும் ஐ.நா-வின் கோரிக்கையை எத்தியோப்பியாவின் வெவ்வேறு சாராரும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்