சமூகப்பற்று நிறைந்த ஆளுமை மனிதர் திரு மனோரஞ்சிதன்
வெற்றிநடை ஊடகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை ஆற்றிய ஆளுமை மிக்க மனிதர் திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன் அவர்கள்.
ரஞ்சன் என்றால்தான் பலருக்கும் தெரியும்.இறுதி மூச்சுவரை தான் வாழ்ந்த சமூகத்திற்காக தனது பணிகளை தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்த, செயற்பட்ட மனிதன் திரு மனோரஞ்சிதன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
உலகின் எந்தப்பாகத்தில் இருக்கும் தனித்திறமை வாய்ந்த இளையோர்களை தாமாகவே அழைத்து உற்சாகப்படுத்தி அவர்களின் ஆற்றல்களை உலகறியச்செய்யவேண்டும் என்ற எண்ணப்பாடு இவரின் சிந்தையில் என்றும் இருக்கும்.
தான் வாழ்ந்த ஊரின் மூத்தோர்களின் பெருமைகளையும் அவர்களிடம் தான் பெற்ற அறிவாற்றல்களை அவ்வப்போது நினைவூட்டியபடியே இருப்பார்.
கரவையூர் வள்ளுவர் மன்றம் மீளுருவாக்கத்தின் அவசியம் குறித்தும் ஊரின் மக்களை கலைகளினூடாக எவ்வாறு இணைக்கமுடியும் என்ற தொலைவுப்பார்வை இவரிடம் இருந்தததை பல தருணங்களில் காணக்கூடியதாக இருந்தது. அதற்கு சான்றாக கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் அந்த அமைப்பினூடாக நீண்ட நாட்களின் பின் ஒரு முதல் இணைய நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றியவர் திரு மனோரஞ்சிதன் அவர்கள்.
வெற்றிநடை ஊடகத்தினூடாக கடந்த நவராத்திரி விஜயதசமியன்று கரவையூர் கவிஞர்களின் கவியரங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி கரவையின் மூத்தோர்களையும் இளையவர்களை இணைத்து பணிசெய்த இவரின் பெருமையை என்றும் மறக்க இயலாது. அவர் எம்முடன் அடிக்கடி உறவாடி நெறிப்படுத்திய விதம் தனித்துவமானது. அவ்வாறு வெற்றிநடை ஊடகம் எடுத்த பணிகளுக்கு உந்துசக்தியாக மிளிர்ந்த ஒரு ஆளுமை மிக்க மனிதர் திரு மனோரஞ்சிதன் மார்க்கண்டு அவர்கள்.
ஆற்றல் மிகு ஆளுமையானை இழந்து தவிக்கும் எம் சமூகம், எம் சமூகத்துடன் இணைந்து என்றும் வெற்றிநடை ஊடகம் நினைவிலிருத்தி அஞ்சலி செய்கிறது.