ஏயர்பஸ் நிறுவனத்துக்கும் கத்தார் ஏயர்வேய்ஸுக்கும் விமானத்தில் பூசப்பட்ட நிறத்தின் தரம் பற்றிய மோதல்.
ஏயர்பஸ் நிறுவனத்திடம் கத்தார் எயார்வேய்ஸ் வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்த 50 விமானங்களுக்கான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 6 பில்லியன் டொலர் பெறுமதியான 50 A321neo விமானங்களை கத்தார் எயார்வேய்ஸ் கொள்வனவு செய்ய முடிவுசெய்திருந்தது. அவைகளை அது திட்டமிட்டிருந்தபடி வாங்காது என்பதுடன் அவ்விரு நிறுவனங்களுக்குமிடையே சட்ட ரீதியான மோதலும் உண்டாகியிருக்கிறது.
எயார்பஸ் நிறுவனத்தால் கத்தார் எயார்வேய்ஸுக்கு விற்கப்பட்டிருந்த Airbus A350 விமானங்களின் நிறத்தின் தரம் மோசமானது, அது விமானத்தின் பாதுகாப்புக்கு இடையூறானது என்பதே கத்தார் எயார்வேய்ஸின் குற்றச்சாட்டாகும். அந்த நிறங்களின் சாயம் வெடிப்புகளை ஏற்படுத்தி, தோல் போன்று உரியப்படுகிறது என்பதைக் காட்டும் படங்களை கத்தார் எயார்வேய்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இதே குற்றச்சாட்டு மேலும் சில விமான நிறுவனங்களால் 2016, 2017 இல் எயார்பஸ் நிறுவனம் மீது குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது கத்தார் எயார்பஸ் மீது போட்டிருக்கும் வழக்கில் தரக்குறைவு காரணத்தால் தாம் பாவனைக்கு எடுக்கமுடியாமலிருக்கும் 21 A350 விமானங்களுக்கான நஷ்ட ஈடாக 600 மில்லியன் டொலருக்கும் அதிகமாகத் தமக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கத்தார் எயார்வேய்ஸ் கோரியிருக்கிறது.
எயார்பஸ் நிறுவனம் தமது விமானத்தின் நிறப்பூச்சுக்களில் எவ்வித தவறுமில்லை என்கிறது. ஐரோப்பிய விமானச்சேவை பாதுகாப்பு அமைப்பு “குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஆபத்து எதுவும் விமானங்களில் இல்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறது. “கொரோனாத்தொற்றுக்காலத்தில் பறக்க முடியாமல் நிறுத்தப்பட்டிருக்கும் விமானங்களுக்கான நட்டத்தில் ஒரு பகுதியைக் கத்தார் எயார்வேய்ஸ் தம்மிடம் பறித்துக்கொள்ள முயல்வதாக எயார்பஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்