அமெரிக்கா நம்மை மதிக்கிறதா?நேட்டோவை விட்டு விலகுங்கள்! பிரான்ஸ் எதிர்கட்சிகள் கோஷம்.
சில தினங்களில் மக்ரோனுடன் பைடன் பேசுவார் என அறிவிப்பு!
நீர் மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரம் மக்ரோனின் அரசுக்கு உள்நாட்டில்பெரும் நெருக்குதலை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று நோய், சுகாதாரப்பாஸ் போன்ற நெருக்கடிகளில் இருந்து மீளும் அவரது அரசு, தேர்தலை எதிர்கொள்ளும் சமயத்தில் புதிதாக ஆஸ்திரேலிய விவகாரம் பூதாகாரமாக கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம்தனது நீண்டகால நேச நாடான – நேட்டோபங்காளியான – பிரான்ஸை வெட்டி விட்டுரகசியமாக ஆஸ்திரேலியாவுடன் செய்துகொண்டுள்ள நீர்மூழ்கிப் பாதுகாப்பு ஒப்பந்தம் பிரான்ஸுக்கு ஏற்பட்ட ஒரு ராஜதந்திரத் தோல்வி என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
உடனடியாக நேட்டோ உச்சி மாநாட்டைக் கூட்டி அமெரிக்கா பிரான்ஸை மதிக்கின்றதா என்பதை வெட்டு ஒன்றாக துண்டுஇரண்டாகக் கேளுங்கள். இல்லையேல்நேட்டோவில் இருந்து வெளியேறுங்கள் என்று முக்கிய எதிர்கட்சிப் பிரமுகர்கள் மக்ரோனிடம் கேட்டிருக்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பிரதானவலதுசாரி வேட்பாளரான சேவியர் பெர்ட்ரான்ட் (Xavier Bertrand), “பிரான்ஸ் எதற்காகவும் எப்போதும் அமெரிக்காவின் சேவகனாகக் கருதப்படக் கூடாது”என்று தெரிவித்திருக்கிறார். எப்போதும்தங்களை முதன்மை(America First) எனக் கூறுகின்ற அமெரிக்காவுக்கு அதே பாணியில் எங்களை நாங்கள் முதன்மைப்படுத்திக் காட்டவேண்டிய தருணம் இது – என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் அணியை விட்டு விலகி ரஷ்யாவின் புடினுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி ஐரோப்பாவைப் பலப்படுத்துகின்ற முயற்சிகளைப் பிரான்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்,ஆலோசனை தெரிவித்துள்ளார்.
“நேட்டோவின் விசேட உச்சி மாநாடு ஒன்றைக் கூட்ட அழைப்பு விடுங்கள்.பிரான்ஸின் இடம் என்ன? அதனைஅமெரிக்கா மதிக்கின்றதா என்ற கேள்விகளைக் கேளுங்கள்.நாங்கள் இரண்டாம் பட்சமாக மதிக்கப்பட்டால் நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளைப் பீடத்தில் பிரான்ஸின் நிலை தொடர்பானகேள்வியை மேசையில் வையுங்கள்.. “
-இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காட்டமாகக் கருத்தை முன்வைத்திருக்கிறார் சேவியர் பெர்ட்ரான்ட்.
நீர்மூழ்கி ஒப்பந்தம் முறிந்து போன விவகாரத்தில் பிரான்ஸின் ராஜதந்திரஉத்திகளில் பலவீனம் இருந்ததா என்பதைக் கண்டறிய நாடாளுமன்ற விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் முன்வைத்துள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அந்தக் குழு முன்னிலையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையில் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளைஅடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த சில தினங்களில் பிரான்ஸின்அதிபருடன் தொலைபேசி ஊடாகத்தொடர்பு கொண்டு பேசுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸில் அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இதனை உறுதி செய்துள்ளார்.
பிரான்ஸுக்குத் தெரியாமல் அமெரிக்காஇங்கிலாந்து இரு நாடுகளுடனும் ஆஸ்திரேலியா செய்து கொண்ட பாதுகாப்புஉடன்படிக்கை பாரிஸுடனான உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் பெரும் ராஜீக நெருக்கடியாக மாறியுள்ளது.புதிய உடன்படிக்கை விடயத்தில் ஆஸ்திரேலியா “பொய்யாக” “நம்பிக்கைத் துரோகத்துடன்” நடந்துகொண்டது என்ற பிரான்ஸின் குற்றச்சாட்டுகளை ஆஸி பிரதமர் ஸ்கொட் மொறிசன் நிராகரித்திருக்கிறார்.
பிரான்ஸின் டீஸல் இயந்திரத் தொழில்நுட்பத்துடனான நீர்மூழ்கிகள் தொடர்பில் ஆஸ்திரேலியா கொண்டிருந்த கவலைகள் உடன்படிக்கையை முறிப்பதற்குமுன்னரே பாரிஸிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.