தனது தேர்தல் தோல்வியை மறைக்க டிரம்ப் போர் ஆரம்பிப்பார் என்று பயந்த அமெரிக்க இராணுவ உயர்தளபதி.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப் தனது பதவியின் கடைசி மாதங்களில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று கலங்கிப்போய் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் உயர் தளபதி அதற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று வெளிவரவிருக்கும் புத்தகம் (Peril) ஒன்று விபரங்களை வெளியிட்டிருக்கிறது. விபரங்களை அறிந்த ரிபப்ளிக் கட்சியினர் பாதுகாப்புத் தளபதி மார்க் மில்லி [Mark Milley] பதவி விலகவேண்டும் என்று கோருகிறார்கள்.
வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர்களான பொப் வூட்வார்ட், ரொபெர்ட் கொஸ்டா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து எழுதியிருக்கும் அந்தப் புத்தகம் டிரம்ப்பின் மனோநிலை தேர்தல் தோல்வியின் பின்னர் மோசமாக இருப்பதாகக் கவனித்து போர்த் தளபதி மார்க் மில்லி அந்த நடவடிக்கைகளை எடுத்தாரென்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் திணைக்களங்களின் தொடர்பு விபரங்களை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்.
தளபதி மில்லி சீனாவின் போர்த் தளபதி லீ சூசெங்க் [Li Zuocheng]ஐ இரண்டு தடவைகள் தொடர்புகொண்டு ‘சீனாவை அமெரிக்கா தாக்கமாட்டாது’ என்று உறுதிகூறியிருக்கிறார். டிரம்ப்பின் நெருங்கிய வட்டத்தினர் எவரும் அறியாத அந்தத் தொடர்புகள் இரண்டும் டிரம்ப் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு மாதங்களில் செய்யப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிக் கலவரம் விளைவித்த இரண்டாம் நாள் ஜனவரி 8 ம் திகதி லீயுடன் சம்பாஷித்த மில்லி, “நாம் நூறு விகிதம் ஸ்திரமாக இருக்கிறோம். ஜனநாயகம் சில சமயங்களில் தாறுமாறாக இருக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டிரம்ப் அமெரிக்காவின் அணு ஆயுதத்தையும் போரில் பயன்படுத்தக்கூடும் என்ற பயமும் மில்லிக்கு இருந்தது. எனவே, அதையடுத்து அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக்களின் சகல உயர்மட்டத் தலைவர்களையும் மார்க் மில்லி தொடர்பு கொண்டு சந்தித்திருக்கிறார். அவர்களிடம் “நீங்கள் தாக்குதலில் ஈடுபடும்படி எங்கிருந்தாவது உத்தரவு வருமானால் அதைக் கையாள மிகத்தெளிவான வரை முறைகள் இருக்கின்றன. அவைகளிலொன்றாக என்னைத் தொடர்புகொண்டு கலந்தாலோசிப்பதும் அவசியம். அவையெல்லாம் தெளிவாக உங்களிடம் இருக்கின்றன. அவைகளில் எதையும் தவிர்த்துவிடாதீர்கள்,” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் நான்சி பெலொசியைத் தொடர்புகொண்ட அவர் தேர்தல் தோல்வியின் பின்னர் டிரம்ப்பின் மனநிலை மோசமாகியிருப்பது பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவர் ஏதாவது ஏடாகூடமான முடிவுகள் எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தான் ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
“உங்களுக்குத் தெரியும் அவருக்கு மூளை சரியில்லை, நீண்டகாலமாகவே மனோ நிலைசரியில்லை”, என்று பதிலளித்த நான்சி பெலோசிக்குப் பதிலாக, “நீங்கள் சொல்வதெல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்பது பாதுகாப்புத் தளபதியின் பதிலாக இருந்திருக்கிறது.
மார்க் மில்லியின் நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், “அவர் சீனாவுடன் தொடர்புகொண்டு தாக்குதல் பற்றி எச்சரித்திருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அப்படியொன்றை அவர் செய்திருந்தால் அது நாட்டுக்குத் துரோகமான நடத்தையாகும். நான் சீனாவைத் தாக்குவேன் என்று அவர் எப்படிக் கற்பனை செய்திருக்கக்கூடுமென்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் தான் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவத்தை வாபஸ் வாங்குவதில் உண்டாக்கிய குழறுபடிகளை மறைக்கவே அவற்றைச் செய்திருக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்