ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது.
பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மியான்மார் இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களின் வரிசையில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஆயுதம் தாங்கிய படையினரின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவத்தின் ஒரே நாள் கொலைகளில் அதிகமான அளவான 114 ஐ இன்று செய்திருக்கிறது.
மியான்மார் இராணுவம் படிப்படியாகத் தன் பிடியை நாட்டு மக்கள் மீது இறுக்கி நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள், மக்கள் கூடுதல், பேரணிகள் நடத்துதல், அரசை எதிர்த்தல் போன்றவைகளைச் சட்டத்துக்கெதிரான குற்றமாக அறிவித்தும் கூட மக்கள் தளரவில்லை. தொடர்ந்தும் நாளாந்தம் வீதிக்கு வந்து தாம் இராணுவ ஆட்சியை ஏற்கத் தயாராக இல்லையென்று உரத்த குரலில் சொல்லி வருகிறார்கள்.
ஜனநாயக ரீதியாக எதிர்ப்பைத் தெரிவிக்க வீட்டுக்கு வெளியே மக்களை வந்து ஒன்று கூடச் சொல்லிக் கேட்டிருந்தார்கள் இராணுவ ஆட்சியை எதிர்க்கும் அமைப்பினர். ஊரடங்குச் சட்டங்களை மீறி அதிகாலையிலேயே வீதியில் நடமாக வந்த மக்களை இராணுவம் பலவந்தமாகத் தாக்கவும், துப்பாக்கிகளால் சுடவும் ஆரம்பித்தது.
இராணுவம் நாட்டைக் கைப்பற்றிய நாளிலிருந்தே மியான்மாரின் தனியார் வங்கி ஊழியர்கள் வேலைக்குப் போக மறுத்து வருகிறார்கள். எனவே வங்கிகளெல்லாம் மூடியே கிடக்கின்றன. ஒரு சில பணம் எடுக்கும் இயந்திரங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. அவைகள் ஈயாக மொய்த்து வரிசையில் நிற்கிறார்கள் மனிதர்கள்.
வேலை நிறுத்தம் செய்பவர்களை வேலைக்கு வராவிட்டால் நாட்டின் தனியார் வங்கிகளையெல்லாம் மூடிவிடப் போவதாக இராணுவத் தலைமை நாட்டின் மத்திய வங்கி மூலமாக அறிவித்திருக்கிறது. தொடர்ந்தும் வேலைக்கு வர மறுக்கிறவர்களை வீடுகளுக்குச் சென்று இழுத்துவர ஆரம்பிக்கிறது இராணுவம். வேலைக்கு வராதவர்கள் நாட்டு அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
பணப்புழக்கம் இல்லாததால் சமூகத்தின் சகல அங்கங்களையும் கைப்பற்ற இயலாமலிருக்கிறதே என்று இராணுவம் நடவடிக்கைகள் எடுக்கும் அதே சமயம் நாட்டின் உணவுப்பொருட்களின் விலைகள் படு வேகமாக அதிகரித்து வருகின்றன. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முன்னரே கொரோனாத்தொற்றுக்களைத் தடுக்க முடக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்ததால் பலர் தமது அன்றாட வருமானத்தை இழந்திருந்தனர்.
தற்போது சமூகத்தின் பெரும்பகுதி இயங்காமலிருப்பதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. ஐ.நா-வின் உணவு உதவி அமைப்பினிடம் உதவி கோருபவர்களின் தொகை வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
கொவிட் 19 நாட்டைப் பாதிக்க முன்னரே மியான்மாரின் 60 % மக்கள் சக்தியுள்ள உணவைப் பெறமுடியாத நிலையிலேயே இருந்தனர். உதவி அமைப்புகள் உணவுப் பொருட்களை விநியோகிப்பது மட்டுமன்றி கையில் உதவிப்பணமும் கொடுத்து வருகிறது. காரணம், அதன் மூலம் நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்க வழிவகுப்பதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்