கொரோனாத் தொற்றல்களுக்குப் புலம்பெயர் தொழிலாளிகளைக் குற்றஞ்சாட்டுகிறது தாய்லாந்து.

சீனாவுக்கு அருகேயிருந்தும், பெரும்பாலான சீனச் சுற்றுலாப் பயணிகளை வருடாவருடம் வரவேற்கும் நாடாக இருந்தும் 2020 இல் கொரோனாப் பரவல் தாய்லாந்தில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலத்தில் மீன் மற்றும் விலங்குகளை விற்கும் சந்தையொன்றில் ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்படும் தொற்றல் வேகமாகப் பரவி வருகிறது.

தாய்லாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் கூடக் கொரோனாத் தொற்றல்கள் நிற்கவில்லை. குறிப்பிட்ட தொற்றுக்களுக்கான காரணம் பக்கத்து நாடான மியான்மாரிலிருந்து தாய்லாந்துக்குக் களவாக வந்திருக்கும் தொழிலாளிகளே என்ற கருத்துத் தாய்லாந்து அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டு வருகிறது. தாய்லாந்துக்குள் கடத்தப்பட்டு வந்திருக்கும் அந்தத் தொழிலாளிகள் மீன் பிடிக்கும் தொழிலில் மிகவும் மோசமான சம்பளத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களைக் கடத்தல்காரர்களே குறிப்பிட்ட இருப்பிடங்களில் வைத்து அடிமைகள் போல நடத்தி வருகிறார்கள்.

சுமார் 3 – 4 மில்லியன் தொழிலாளிகள் தாய்லாந்தில் அனுமதியின்றி வாழ்ந்து வேலை செய்கிறார்கள். போதைப் பொருட்களை கடத்துபவர்கள் போலவே மனிதக் கடத்தல்காரர்களால் இந்தத் தொழிலாளிகள் கடத்தப்பட்டு வருவதாகவும் இரண்டுமே தாய்லாந்தின் கட்டுப்பாட்டை மீறித் தலையெடுத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது தாய்லாந்து.  

 தாய்லாந்தின் பிரதமரே கொரோனாப் பரவலுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் காரணமென்று குறிப்பிட்டாலும் அதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லையென்கிறார்கள் மனித உரிமை அமைப்பினர். மியான்மாரில் கொரோனாப் பரவல் அதிகமாக இருப்பினும் அங்கிருந்து களவாத் தாய்லாந்தர்களால் உள்ளே கொண்டுவரப்படுகிறவர்கள் அவர்களை நாட்டுக்கு விரும்பியபோதெல்லாம் திரும்ப அனுமதிப்பதில்லை.

ஆதாரமின்றிப் பரப்பட்டிருக்கும் கருத்துக்களால் தாய்லாந்து மக்களிடையே புலம்பெயர் தொழிலாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டாகி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பரவலாக வெறுப்பான, வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் பரப்பட்டு வருகின்றன.

வறுமையால் தமது உடமைகளையெல்லாம் விற்றுத் தாய்லாந்துக்குப் பிழைக்க வந்திருக்கும் மியான்மார் தொழிலாளிகள் இல்லையேல் தாய்லாந்தின் மீன்பிடித் தொழில் இயங்க முடியாது. குறிப்பிட்ட மனிதக் கடத்தல், அடிமைத் தொழிலாளிகள் பற்றி அறிந்த ஐரோப்பிய ஒன்றியம் சில வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து அந்த நிலையை ஒழுங்குசெய்யாவிடில் தாம் அங்கிருந்து இறக்குமதிகளை நிறுத்திவிடுவதாக அறிவித்திருந்தது. அதைச் செய்வதாக உறுதியளித்திருந்தாலும் தாய்லாந்து அதைப்பற்றி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.

சமீபத்திலேற்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களுக்கெதிரான உணர்வுகள் தமது தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதாகத் தாய்லாந்தின் மீன்பிடி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. தினசரி 800 பேர்களால் அதிகமாகிக்கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்வரமுடியாமல் தவிக்கும் அதிகாரிகள் வேண்டுமென்றே புலம்பெயர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டுவதாக மீன்பிடி நிறுவனங்களின் சங்கம் குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *