ஒரு அமெரிக்கப் புறாவைக் கொல்ல விரும்பும் ஆஸ்ரேலிய அரசு.

கெவின் [Kevin CELLIBIRD] என்ற ஆஸ்ரேலியர் தனது வீட்டுத் தோட்டத்தில் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு புறாவை டிசம்பர் 26 ம் திகதியன்று கண்டார். போட்டிக்கு விடப்படும் அப்புறாவானது ஒக்டோபர் 29 தேதியன்று அமெரிக்காவில் ஒரெகன் மாநிலத்தில் கலந்துகொண்ட ஒரு போட்டியிலிருந்து வழி மாறி ஆஸ்ரேலியாவை அடைந்திருகிறது.

சுமார் 13,000 கி.மீ தூரத்தைக் கடந்து வந்திருக்கும் அந்தப் புறாவுக்கு ஜோ என்று பெயர் வைத்திருக்கிறார் கெவின். ஜோ தனது வழியில் பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும்போது ஏதாவது கப்பலொன்றில் தாவியிருக்கக்கூடுமென்று அனுமானிக்கப்படுகிறது.

ஜோ ஆஸ்ரேலியாவின் “தனிமைப்படுத்தல்” அதிகாரிகளின் கண்ணில் பட்டுவிட்டதால் அவர்கள் அதைப் பிடிக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். “அந்தப் புறா ஆஸ்ரேலியாவின் காட்டுப் பறவைகளுக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்தானதாக இருக்கலாம்,” என்று சந்தேகப்படுகிறார்கள் ஆஸ்ரேலிய அதிகாரிகள்.

பொதுவாகவே அமெரிக்காவிலிருந்து வரும் விலங்கினங்கள் மீது ஆஸ்ரேலியாவில் சந்தேகக் கண்கள் படுகின்றன. புறாக்கள் உட்பட அங்கிருந்து வரும் விலங்கினங்கள் ஆஸ்ரேலியப் பிராந்தியத்துக்கு வித்தியாசமான வியாதிகளைக் கொண்டிருக்கலாம் என்பதால் அவை நாட்டிலிருக்கும் விலங்கினங்களுக்கும், பின்னர் மனிதர்களுக்கும் பாதுகாப்பற்றதாகலாம் என்று கருதப்படுகிறது.

கெவின் தான் புறா ஜோ வந்த நாளிலிருந்தே அதற்கு உணவு கொடுத்து வருகிறார். அப்புறாவைப் பிடிக்க அவரிடம் அதிகாரிகள் கேட்டதை அவர் மறுத்துவிட்டார். எனவே, அதற்காக ஒரு பறவை வேட்டைக்காரரைப் பாவிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் புறாவின் உரிமையாளர் அமெரிக்காவில் எவரென்று கெவின் அறிந்துகொண்டு அவரைத் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.

2005 இல் நடிகர் ஜோனி டெப் தம்பதிகள் இரகசியமாக ஒரு சோடி வளர்ப்பு நாய்களை ஆஸ்ரேலியாவுக்குள் கொண்டுவந்தார்கள். அது தெரியவந்ததும் அதிகாரிகள் அவைகளைக் கொல்லவேண்டும் அல்லது 50 மணிகளுக்குள் அங்கிருந்து வெளியேற்றவேண்டுமென்று கெடுக் கொடுத்தார்கள். ஜோனி டெப் வேறு வழியின்றி ஒரு தனியான விமானத்தில் அந்த நாய் சோடியை ஆஸ்ரேலியாவிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *