அகதிகளாலான கவசம், பெலாருசின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசியல் போரில் அகதிகள் கவசமாக்கப்பட்டு போலந்தின் எல்லையில்.
போலந்து – பெலாரூஸ் எல்லையில் பெலாரூஸ் பக்கத்தில் குவிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் போலந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப நாட்களில் பெலாரூஸ் திட்டமிட்டு மீண்டும் பல்லாயிரக்கணக்கான அகதிகளை அங்கே வரவழைத்துக் குவித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
“எங்கள் எல்லைகளைக் காப்பது எங்கள் நாட்டின் அவசியம். இன்றோ ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பும், திடநிலையும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. லுகசெங்கோ அரசின் பன்முனைத்தாக்குதல் எங்கள் எல்லாரின் மீதும் ஏவப்படுகிறது. நாம் எங்கள் முழுப் பலத்துடனும், ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ அமைப்பு ஆகியவையின் உதவியுடனும் அமைதியைப் பாதுகாப்போம், கலங்கமாட்டோம்,” என்று போலந்தின் மத்தேயுஸ் மொராவெய்க்கி குறிப்பிட்டிருக்கிறார்.
போலந்து தனது பெலாரூஸ் எல்லை நிலையைத்தை [Kuźnica] இன்று மூடிவிட்டது. அவ்வெல்லையைத் தொடர்ந்த சுமார் 400 கி.மீற்றர் நீள எல்லை வேலியால் பாதுகாக்கப்படுகிறது. அதன் அடுத்த பக்கத்தில் சுமார் 3,000 – 4,000 அகதிகள் குவிந்திருப்பதாகவும் அவர்கள் தமது பக்கத்துக்குப் பாய முயல்வதாகவும் போலந்து அரசு குறிப்பிடுகிறது. அதனால், அவ்வெல்லைக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொலீஸ், இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.
குவிந்திருக்கும் அகதிகளில் பலர் பெண்கள், குழந்தைகள் உட்பட்ட குடும்பங்களாகும். அவர்களிடமிருந்து பெலாரூஸ் அரசின் பின்னணி கொண்ட முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டுவந்து குவித்திருப்பதாகத் தெரிகிறது. எவ்வசதிகளுமின்றி அங்கே மாட்டிக்கொண்டிருக்கும் அவர்கள் மீண்டும், மீண்டும் எல்லையைத் தாண்டிவர முயற்சி செய்வதால் அங்கு கலவர நிலைமை உண்டாகியிருப்பதாகவும், அது பலாத்காரம், வன்முறையில் முடியும் ஆபத்திருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டு வருகின்றன.
பத்திரிகையாளர்களோ, பொதுமக்களோ எல்லையை நெருங்கமுடியாது. போலந்து அரசின் உத்தியோகபூர்வமான படங்களும், அகதிகள் படமாக்கிச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் படங்களும் பதட்ட நிலையையே ஊர்ஜிதம் செய்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்