ரஷ்யாவும், பெலாருசும் சேர்ந்து பெப்ரவரி மாதத்தில் பெரிய இராணுவப் பயிற்சியொன்றை நடத்தவிருப்பதாக அறிவிப்பு.
ரஷ்ய – உக்ரேன் எல்லையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கின்றன. அதை மேலும் தூண்டுவது போல ரஷ்யா தனது மேலுமொரு ஆதரவு நாடான பெலாரசுடன் சேர்ந்து இராணுவப் போர்ப் பயிற்சியொன்றை பெப்ரவரியில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றது.
சமீபத்தில் தனது நாட்டுக்குள் சிரியா, ஈராக் போன்ற நாட்டவர்களைக் கொண்டுவந்து அவர்களை எல்லையிலிருக்கும் போலந்து, லித்தவேனியா ஆகிய நாடுகளுக்குள் நுழையத் தூண்டிய நாடு பெலாரூஸ் ஆகும். நாட்டின் தலைமப் பதவியில் சர்வாதிகாரங்களுடன் இருக்கும் அலெக்சாந்தர் லுக்கசெங்கோ இராணுவப் போர்ப்பயிற்சி பற்றி அறிவித்தார்.
“நான் இதை முதலிலேயே எச்சரிக்கக் காரணம், நாம் போருக்குத் தயாராகிறோம் என்ற குற்றச்சாட்டு ஐரோப்பாவிலிருந்து வரக்கூடாது என்பதாலாகும். இது ஒரு சாதாரண இராணுவப் பயிற்சியே. தெற்கிலும், மேற்கிலும் நாம் தாக்கப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று திட்டமிடும் பயிற்சியாகும்,” என்றார் லுக்கசெங்கோ.
போர்ப்பயிற்சியில் எத்தனை இராணுவத்தினர் பங்குபற்றுவார்கள், எந்தெந்த இராணுவத் தளபாடங்கள் பாவிக்கப்படும் போன்றவை பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அப்பயிற்சி பெலாரூஸின் தெற்கு, மேற்கு எல்லைப் பிராந்தியங்களில் நடாத்தப்படும் என்றும் அதில் பங்குபற்றுவதற்காக ரஷ்யாவின் இராணுவத்தினர் ஏற்கனவே பெலாருசுக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் பெலாரூஸ் செய்திகள் தெரிவித்தன.
இராணுவப் பயிற்சி நடக்கவிருக்கும் எல்லைகளையடுத்து ஐரோப்பிய ஒன்றிய, நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களான போலந்து, லித்தவேனியா மற்றும் உக்ரேன் ஆகியவை இருக்கின்றன.
ரஷ்யாவின் இராணுவத்தின் 100,000 இராணுவத்தினர் ஏற்கனவே உக்ரேன் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். தாம் உக்ரேனுக்குள் நுழைந்து நாட்டைக் கைப்பற்றும் எண்ணமில்லை என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டு வரும் ஜனாதிபதி புத்தின் ஐரோப்பாவிடமும், நாட்டோ அமைப்பிடமும் தனது கோரிக்கைகளாக அவ்வமைப்புக்கள் தமது அரசியல் ஆதரவுப் பிராந்தியங்களிலிருந்து விலகியிருக்கவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்