பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் பதிவு திகதி நெருங்க நெருங்க, விறுவிறுப்பு அதிகமாகிறது.
அடுத்த வருடம் மே மாதத்தில் நடக்கவிருக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகப் பதிவுசெய்துகொள்ளும் கடைசித் தேதி நவம்பர் 15 ஆகும். அத்தேர்தலில் யார் வெல்வார் என்பதை விட வேட்பாளராக ஜனாதிபதியின் மகள் களத்தில் இறங்குவாரா என்ற கேள்வி தீவிரமாகக் கொதித்துக்கொண்டிருப்பதால் அத்தேர்தல் பற்றிய விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மகள் சாரா டுவார்ட்டே கார்ப்பியோ தான் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்று அறிவித்திருந்தாலும்கூட அவரே அப்பதவியைப் பெற பலராலும் விரும்பப்பட்டு வருவதாகத் தொடர்ந்தும் கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டு வருகின்றன.
பிலிப்பைன்ஸின் டாவோ சிட்டியில் ஆளுனராக இருந்து வரும் சாரா கார்ப்பியோ அடுத்த தடவை அந்தப் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று அறிவித்தார். தனக்குப் பதிலாக சகோதரன் செபாஸ்தியான் அப்பதவிக்குப் போட்டியிடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.டுவார்ட்ட்டேயின் மகன் செபாஸ்தியான் ஏற்கனவே அந்த நகரின் உப ஆளுனராகப் பதவியிலிருக்கிறார்.
சாராவின் அந்த அறிவிப்பின் காரணம் அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களத்தில் குதிப்பதே என்ற ஊகத்துடன் மீண்டும் தேர்தல் களத்தைச் சூடுபிடிக்கச் செய்திருக்கிறது.
தேர்தல் களத்தில் ஏற்கனவே குதித்திருக்கும் பிரபலங்கள் உப ஜனாதிபதி லேனி ரொபிரேடோ, முன்னள் நடிகரும் மணிலா நகர ஆளுனருமான பிரான்ஸிஸ்கோ டொமகாஸோ, முன்னாள் குத்துச்சண்டை வீரரும், இன்னொரு நகர ஆளுனருமான மன்னி பக்குவாயோ, முன்னாள் ஜனாதிபதி மார்க்கோஸின் மகன் பொங்பொங் மார்க்கோஸ் ஜூனியர் ஆகியோராகும்.
சாரா டுவார்ட்டே மார்க்கோசின் மகனுடன் கூட்டுச்சேரலாம் என்றும் வதந்தியொன்று பரவியிருக்கிறது. அக்குடும்பங்கள் இருவருமே பிலிப்பைன்ஸின் மிகப் பலமான அரசியல் குடும்பமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்