மெக்சிகோவின் 31 வயதான குத்துச்சண்டை வீரர் சரித்திரம் படைத்தார்.

நடுத்தர எடையுள்ளவர்களுக்கான சர்வதேச உயர்மட்டப் போட்டிகள் நான்கிலும் பனிரெண்டு மாதங்களுக்குள் வெற்றிபெற்று அவைக்கான பட்டைகளை வென்றெடுத்த ஒரே வீரர் என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்டார் மெக்சிகோவின் ஸௌல் அல்வாரஸ் [Saúl “Canelo” Álvarez]. லாஸ் வேகாஸ் நகரில் அமெரிக்க வீரர் கலெப் பிளாண்ட்டை பதினோராவது சுற்றில் முழுசாக விழுத்தி வெற்றியெடுத்தார். தனது கடந்த 21 மோதல்களிலும் தோற்காமலிருந்த கலெப் பிளாண்டுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

நாலு பிள்ளைகளுக்குத் தந்தையான ஸௌல் அல்வாரஸ் சனியன்று இரவு நடந்த IBF  போட்டியில் வெற்றிபெற்றதுடன் ஏற்கனவே பெற்றிருந்த  WBC, WBA, WBO பட்டைகளுடன் இந்த நான்காவது  பட்டையையும் தனதாக்கியிருக்கிறார். அது மட்டுமன்றி உலகக் குத்துச்சண்டை சம்மேளனம் 1988 இல் இந்த நான்கையும் வெல்பவரை உலகின் குத்துச்சண்டை வீரன் என்று பிரகடனப்படுத்தியபின் அவற்றை வெல்லும் ஆறாவது நபரும் ஸௌல் அல்வாரஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற அல்வாரஸ் மேடையில் நின்றபடி தனது கடைசி மகளை எடுத்து முத்தமிட்ட காட்சி பலரையும் கவர்ந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்