தலிபான்களின் தயவால், நடக்கவிருக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டை சர்வதேசமே கவனிக்கிறது.

வெள்ளியன்று தாஜிக்கிஸ்தான் தலைநகரான டுஷாம்பேயில் ஆரம்பிக்கவிருக்கிறது ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாடு. 2001 இல் சீனாவால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுறவு, பாதுகாப்பு அமைப்பின் மாநாடுகள் பொதுவாக முக்கிய ஊடகங்களிலோ, சர்வதேச அரசியல் அரங்கிலோ கவனத்தை ஈர்ப்பதில்லை. திடீரென்று இப்போது அந்த அமைப்பின் மீது உலக நாடுகள் கவனம் கொள்ளக் காரணம் எதிர்பாராதவிதமாக மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாயிருப்பதாகும்.

தொலைத்தொடர்பின் மூலம் மாநாட்டை ஆரம்பித்துவைக்கவிருக்கிறார் மோடி. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். மத்திய ஆசிய நாடுகள் தவிர ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றன. 

தலிபான் இயக்கங்களின் ஆட்சியமைப்புக்கு ஆசீர்வாதம் கொடுத்த நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் ஒரு பக்கம், அவர்களின் கடந்த கால ஆட்சியையையோ, தற்போதைய தலைமையையோ, அவர்களின் பழமைவாத இஸ்லாத்தையோ அங்கீகரிக்க மறுக்கும் தாஜிக்கிஸ்தான் எமோமாலி ரஹ்மோன் இன்னொரு பக்கமாக மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பங்குகொள்ளப்போகும் மற்றைய நாடுகளிடம் தலிபான் ஆட்சியை ஏற்பதா, மறுப்பதா, அலட்சியம் செய்வதா என்ற தெளிவான முடிவு இதுவரை இல்லை. 

இந்தியா அந்த அமைப்பில் முழு அங்கத்துவராகச் சேர்ந்த பின்பு பங்கெடுக்கப்போகும் நாலாவது மாநாடு இது. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது “புரிந்துணர்வுடன் நடந்து தொடர்ந்து உதவப்போவதாகச்” சொல்லியிருக்கும் இந்தியா இதுவரை தலிபான் இயக்கத்தினரின் ஆட்சியை அங்கீகரிப்பது பற்றி எதுவும் தெளிவாகச் சொல்லவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆதரித்தது மூலம் மீண்டும் பலம் பெற்றிருக்கும் பாகிஸ்தான் மூலமாகத் தீவிரவாதம் இந்தியாவுக்குள் மீண்டும் பரவக்கூடுமா, காஷ்மீர் பிரச்சினையில் தற்போதைய நிலை மேலும் சிக்கலை உண்டாக்குமா போன்ற எண்ணங்களுடன் இந்தியா அந்த மாநாட்டில் பங்குபற்றவிருக்கிறது. அதே நாளில் அதே நகரில் ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் “கூட்டுப் பாதுகாப்பு மாநாட்டிலும்” பங்குபற்றவிருக்கிறது இந்தியா.

ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டையொட்டி அங்கே வரவிருக்கும் அப்பிராந்தியத் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானை எப்படித் தொடர்ந்தும் கையாளலாம் என்று கலந்தாலோசிக்க அங்கே பல அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புள்ளிகளும், மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளும் டுஷாம்பேக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆசியாவிலேயே ஏழை நாடென்று கருதப்படும் தாஜிக்கிஸ்தான் மிகப்பெரும் ஒளிவிளக்கின் கீழே வந்திருப்பது அதன் சர்வாதிகாரத் தலைவருக்கும் அவர் எதிர்காலத் திட்டங்களுக்கு என்ன மாதிரி முடியுமோ என்பது கேள்விக்குறி.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *