தமிழ் அரசியல்கைதிகளைச் சிறைக்குள் முழங்காலிலிருக்க வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டிய அமைச்சர் பதவி விலகினார்.

செப்டெம்பர் 12 ம் திகதியன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த சிறைச்சாலைகள் பொறுப்பு அமைச்சர் லோகன் ரத்வத்த அங்கிருந்த இரண்டு தமிழ்க் கைதிகளைத் தன் முன்னால் முழங்காலில் நிற்கவைத்தார். அதன் பின் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவ்விபரங்கள் வெளியாகியதால் ஏற்பட்ட விமர்சனங்களைத் தாங்க முடியாமலேயே அவர் தனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்று காலையில் அமைச்சர் ரத்வத்த கொழும்பு மத்திய சிறைச்சாலைக்குத் தனது நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்றிருந்தார். அவர்களுக்கு அங்கிருந்த தூக்கு மேடையை அவர் காட்டினார். சிறைச்சாலைக்கு உள்ளே சென்றிருந்த சமயம் அவர் தனது சொந்த ஆயுதத்தையும் எடுத்துச் சென்றிருந்தார். அது தவறென்று சிறைச்சாலை அதிகாரிகள் சுட்டிக் காட்டியும் அவர் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

அதன் பின்னரே அவர் அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளையெல்லாம் தன் முன்னால் கொண்டுவரச் செய்ததாகத் தெரியவருகிறது. இவ்விபரங்களைச் சிறைச்சாலை அமைச்சரகம் மறுத்திருக்கிறது.

அமைச்சரின் செயல் சிறீலங்காவின் தமிழ்க் கட்சிகளால் ஒட்டு மொத்தமாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பதவியை விட்டு விலக்குவதுடன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். 

நடந்த விபரங்கள் வெளியாகியதும் சிறீலங்காவிலிருக்கும்  ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியும் அமைச்சரின் செயல்களைக் கண்டித்திருக்கிறார். ரத்வத்தயின் ராஜினாமா ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சேவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *