“முன்னாள் சோவியத் அங்கத்துவர்களை நாட்டோ தனது அங்கத்துவர்களாகக்கலாகாது,” என்கிறது ரஷ்யா.
சமீப வருடங்களில் படிப்படியாக மோசமாகிவிட்டிருக்கும் மேற்கு நாடுகள் – ரஷ்யாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் நச்சாகி வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டிவருவதும், ரஷ்யா உக்ரேனையடுத்துத் தனது இராணுவத்தைக் குவித்துக்கொண்டு போரை மறுத்துவருவதும், அதே நேரம் மேற்கு நாடுகள் மீது சில கோரிக்கைகளை வைத்திருப்பதுமாக அவ்வுறவு திரிந்து போயிருக்கிறது.
ஒரு வாரத்துக்கு முன்னர் தொலைத்தொடர்பில் நடந்த அமெரிக்க – ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் “உக்ரேனை, ரஷ்யா தாக்கித் தன்னிடம் இணைத்துக்கொள்ளுமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா தயங்காது,” என்று ஜோ பைடன் எச்சரித்திருந்தார். அதையடுத்த நாட்களில் ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் ரஷ்யாவிடம் அதே எச்சரிக்கையை விட்டிருக்கின்றன.
ரஷ்யாவோ தனது பங்குக்கு மேற்கு நாடுகள், நாட்டோ அமைப்புக்கு “‘ரஷ்யாவுக்குப் பிடிக்காதவை,” என்ற கோரிக்கைப் பட்டியலொன்றை வெளியிட்டிருக்கிறது. அவைகளில், “எதிர்காலத்தில் ரஷ்யாவின் அனுமதியின்றி புதிய அங்கத்துவர்களை நாட்டோ சேர்த்துக்கொள்ளலாகாது, முன்னாள் சோவியத் நாடுகளை அங்கத்துவர்களாகச் சேர்த்துக்கொள்ளலாகாது, அப்படியான நாடுகளில் நாட்டோவின் இராணுவ முகாம்களை நிறுவலாகாது,” போன்ற மேற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாதவையும் இடம்பெற்றிருக்கின்றன.
“எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மூன்றாவது நாடொன்றில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நாம் நாளையே தயார்,” என்கிறார் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் ரியாப்கோவ்.
“ரஷ்யா தனது துருப்புக்களை ஐரோப்பாவின் எல்லையில் உக்ரேனை அடுத்துக் குவித்திருப்பது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அப்படியான நிலைமையில் ஐரோப்பிய நாடுகளின் எண்ணங்களை அறிந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்தே எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கும்,” என்று நாட்டோவின் காரியதரிசில் யென்ஸ் ஸ்டோட்டன்பெர்கும், ஜோ பைடனும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் நாட்டோ அமைப்பில் யாரைச் சேர்ப்பது என்பதன் அறுதி முடிவை ரஷ்யாவிடம் விட அமெரிக்கா, நாட்டோ, ஐரோப்பிய நாடுகள் தயாராக இல்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்