நஞ்சு வியாபாரத்தால் வாழ்க்கையில் உயர்ந்த எகிப்தியர்.
எகிப்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் முஹம்மது ஹம்தி போஷ்டா தனது பண்ணைகளில் நஞ்சு சேர்ப்பதற்காக 80,000 தேள்கள், பாம்புகள் போன்ற அபாயகரமான ஜந்துக்களை வளர்த்து வருகிறார். இவரது நிறுவனமான கெய்ரோ வெனொம் கொம்பனி ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் இந்த ஜந்துகளிலிருந்து எடுக்கப்படும் நஞ்சை ஏற்றுமதி செய்கிறது.
2015 இல் தனது தொல்பொருளாராய்ச்சிக் கல்வியை விட்டுவிட்டு 100 தேள்களுடன் தேள்களை வளர்க்கும் பண்ணையொன்றை ஆரம்பித்த ஹம்தியின் நிறுவனம் எகிப்தின் பல பாகங்களுக்கும் இப்போது பரவியிருக்கிறது. ஒரு கிராம் உலர்ந்த நஞ்சு சர்வதேசச் சந்தையில் விலை சுமார் 12,000 டொலர்களுக்கு மேலாக விற்கப்படுகிறது.
ஆயிரம் தேள்களைக் கொண்ட ஒரு பண்ணையை ஆரம்பிக்க சுமார் 350 டொலர்களே செலவாகிறது என்று சொல்லும் ஹம்தி அப்படியொரு பண்ணையால் ஒரு மாதத்தில் ஒரு கிராம் தரமான உலர்ந்த நஞ்சைத் தயாரிக்க முடியும் என்கிறார். இந்த நஞ்சு பல விதமான மருந்துகளுக்கு அடிப்படை இரசாயனமாகப் பாவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்