சென்னையில் சுவாசிக்கும் காற்று கடந்த வருடத்தை விடச் சுத்தமாகியிருக்கிறது.
கடந்த வருடத்தில் சென்னையின் காற்றுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் அதன் தரம் மேன்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தை விடவும் மாசு குறைவாக இருப்பதாகவும் தெற்கு ஆசிய கிரீன்பீஸ் அமைப்பின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சுவாசத்தை நச்சாக்கும் PM 2.5 அணுக்கள் சென்னைக் காற்றில் கடந்த நவம்பரில் 54.65 μg/m3 ஆக இருந்தது, இவ்வருடம் அதே மாதத்தில் 34.11 μg/m3 ஆகக் குறைந்திருக்கிறது. பெங்களூரில் அது கடந்த நவம்பரில் 33.49μg/m3 ஆகும். ஹைதராபாத்திலோ 56.32μg/m3 ஆகும்.
மாசுபடுத்தப்பட்ட காற்றால் இவ்வருட ஆரம்பத்திலிருந்து செப்டம்பர் 4 ம் திகதிவரை பெங்களூரில் 7,577 பேரும், ஹைதராபாதில் 6,228 பேரும், சென்னையில் 6,374 பேரும் இறந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
“சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துவதில் தொழிற்சாலைகளைத் தவிர மிக முக்கிய இடத்தைப் பெறுவது வாகனப் போக்குவரத்து ஆகும். கொவிட் 19 காலம் எங்களுடைய எண்ணங்களை உறையவைத்து வித்தியாசமாகச் சிந்திக்கவைத்திருக்கிறது. எப்படிப்பட்ட வளர்ச்சி எங்களுக்குத் தேவை என்று நாம் சிந்திக்கவேண்டும்,” என்று குறிப்பிடுகிறார் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை எதிர்த்துப் போராடும் இந்திய கிரீன்பீஸ் அமைப்பின் அருணாஷ் சஞ்சல்.
சாள்ஸ் ஜெ.போமன்