“வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்களுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்து உடனே தேவையில்லை,” என்கிறார் டிரம்ப்.
டிசம்பர் 14 திங்களன்று அமெரிக்காவில் விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்தை முதல் கட்டத்திலேயே ஜனாதிபதி டிரம்ப், உப ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசம் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் அரசாங்கம் இடைஞ்சலின்றி நடக்க வழிசெய்யலாம் என்பதே காரணம்.
ஆனால் டிரம்ப் அதை நிராகரித்து டுவீட்டினார். “வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர்கள் அவசிய காரணங்களெதுவுமில்லாத பட்சத்தில் தடுப்பு மருந்து விநியோகித்தலின் பிற்றைய கட்டங்களில் அதைப் பெற்றுக்கொள்வார்கள்,” என்று.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே செப்டம்பர் மாதத்தில் டிரம்ப் தம்பதிகள் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டார்கள். அதன் பின் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு இருவரும் குணமானார்கள் என்பதும் அதைத் தொடர்ந்து டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் பங்குபற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்