பிரெஞ்ச் கேலிச்சித்திரச் சஞ்சிகைப் பத்திரிகைக் காரியாலக் கொலைகள் செய்தவர்களுக்கான தண்டனைகள் இன்று அறிவிக்கப்படும்!
2015 ம் ஆண்டு பாரிஸிலிருக்கும் சார்ளி எப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது தாக்கிக் கொலைகள் செய்த தீவிரவாதிகள் மீதான வழக்கில் இன்று [16.12] தீர்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. தமது மதத்தின் இறைதூதர் முஹம்மதுவைச் சஞ்சிகையின் கேலிச் சித்திரங்களில் வெளியிட்டதைத் தண்டிப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் அத்தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
ஜனவரி மாதம் 2015 இல் அச்சஞ்சிகை அலுவலகத்தில் 12 பேர்களைக் கொல்வதுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதலில் அடுத்த மூன்று நாட்களும் சேர்த்து 17 பேர் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பிரெஞ்சுப் பெண் பொலீஸைக் கொலை செய்ததுடன் பல்பொருள் அங்காடியில் சிலரைப் பயணக் கைதிகளாக வைத்தும் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தினர். துப்பாக்கித் தாக்குதல்களில் பங்குகொண்ட மூன்று தீவிரவாதிகளும் அதைத் தொடர்ந்த பொலீஸ் வேட்டையில் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெவ்வேறு தாக்குதல்களிலும், வெறித்தனமான கொலைகளிலும் ஈடுபட்டனர். அதைக் கண்டித்து உலகின் பல நாடுகளில் பிரான்ஸையும், கருத்துச் சுதந்திரத்தையும் ஆதரிக்கும் விதமாக “I am Charlie” என்ற குரல் எழும்பியது.
சஞ்சிகைக் காரியாலயக் கொலைகள் செய்த இரண்டு சகோதரர்கள், மற்றும் பல்பொருள் அங்காடியில் சிலரைப் பூட்டிவைத்திருந்தவன் ஆகியோருக்கு உதவி செய்தவர்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களிலொருவரின் பெண் கூட்டாளி தாக்குதலின் பின்னர் தப்பித்து சிரியாவுக்கு ஓடிவிட்டதை விமான நிலையத்தின் கண்காணிப்புப் படங்கள் மூலம் அறிய முடிந்தது. அவள் மீதும் வழக்குப் போடப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு ஐந்து வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை கொடுத்துத் தண்டிக்கவேண்டும் என்று கோருகிறார்கள் அரச வழக்கறிஞர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்