“சிறீலங்காவில் சமீப காலத்தில் எந்த ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்தும் விநியோக்கிக்கப்படச் சாத்தியங்களில்லை.” – மக்கள் ஆரோக்கிய அமைச்சர்
பணக்கார நாடுகள் பலவும் ஏற்கனவே ஆராயப்பட்டு வெற்றியளித்ததாகக் குறிப்பிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்கும் ஒப்பந்தங்களில் மும்முரமாயிருக்கும்போது சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ள “இதுவரை இந்த நோய்க்கான எந்த மருந்தையும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு [WHO] ஆராய்ந்து அது வெற்றிபெற்றதாகச் சொல்லவில்லை. எனவே நாம் எந்த மருந்தைக் கொள்வனவு செய்வது, ஒப்பந்தங்கள் செய்துகொள்வது பற்றித் திட்டமிடவில்லை. தற்போதைய நிலையில் எந்த ஒரு மருந்தையும் வேகமாக எதிர்பார்க்க முடியாது,” என்று குறிப்பிடுகிறார்.
“உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு [WHO] தனது ஆராய்வுகளின் பின்னர் எந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்ட பின்னரே எந்தத் தடுப்பு மருந்தை எங்கள் நாட்டில் பாவிப்பது என்பது பற்றிய விடயங்களை நாம் யோசிப்போம். தற்போதைய நிலையில் எந்த மருந்துகளைப் பற்றியும் எங்களிடம் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் கிடையாது. அவைகள் ஊடகங்கள் மூலமாகவே எங்களுக்கும் கிடைத்து வருகின்றன. பொதுவாகவே ஒரு தடுப்பு மருந்து பாவிப்புக்கான அங்கீகாரம் பெறச் சில வருடங்களாகின்றன.” என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ.போமன்