பாலியல் துன்புறுத்தல்களில் தனது கெட்ட பெயரைத் துடைத்துக்கொள்ள ரயில்களில் போராடும் எகிப்து.
பல வருடங்களாகவே நாடெங்கும் நடந்துவரும் பாலியல் துன்புறுத்தல்களால், பெண்களின் பாதுகாப்புக்கு முகவும் மோசமானது என்ற பெயரைப் பெற்றுச் சர்வதேச ரீதியில் அவப்பெயரைச் சம்பாதித்து வருகின்ற நாடு எகிப்து. சமீப வருடங்களில் நாட்டில் உண்டாகிய ஜனநாயகப் போராட்டங்களின்போதும் கூடப் பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டது உலகின் மூலை முடுக்கெங்கும் வெளியானது.
உள்நாட்டிலும் அவ்விடயம் மிகவும் பரவலாக அறியப்பட்டதால் பொதுப் போக்குவரத்துகளில், அதிலும் ரயில்களில் பயணம் செய்யப் பெண்கள் மிகவும் தயங்குகிறார்கள்.
2013 இல் ஐக்கிய நாடுகள் சபையால் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டில் 70 விகிதமான பெண்கள் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்யப் பயப்பிடுகிறார்கள் என்று தெரியவந்தது. அதே கணிப்பீட்டின்படி 99 விகிதமான எகிப்தின் பெண்கள் தினசரி வாழ்வில் வெவ்வேறு வகைகளில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது. 2017 இல் மனிதாபிமான அமைப்பொன்றின் கணிப்பீட்டின் நாட்டின் தலைநகரான கெய்ரோ தால் உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மோசமான நகரம் என்றும் தெரியவந்தது.
சர்வதேச ரீதியில் நற்பெயரை எடுக்க மட்டுமன்றி, நாட்டின் அதிமுக்கியமான வருவாய்தரும் துறையான சுற்றுலாத்துறையும் மேற்கண்ட விடயங்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவேண்டிய நிலைக்கு எகிப்தின் அரசு ஆளாகியிருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் அதன் மூலம் பெண்கள் வெளியே தலைகாட்டப் பயப்படும் நிலை மாறவேண்டும் என்ற நோக்கிலேயே எகிப்து தனது ரயில் போக்குவரத்தைப் பாதுகாப்பாக்க முனைவதன் காரணமாகும்.
“ரயில் பயணங்கள் பாதுகாப்பானவை,” என்ற சுலோகம் ரயில் நிலையங்களில் வைக்கப்படுவதுடன், பெண்கள் தங்களைத் துன்புறுத்துகிறவர்களை எப்படியாக அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும், சந்தர்ப்பங்களை எப்படிக் கையாளவேண்டும் போன்ற விடயங்களை பட விளம்பரங்களாகவும் பரப்பிவருகிறது அரசு.
பாலியல் துன்புறுத்தல்கலை அலட்சியம் செய்தலும் எகிப்தின் தற்போதைய நிலைக்குக் காரணமென்பதால் ரயில்களில் அவ்விடயங்களைக் கண்காணிக்க ஆண், பெண் உத்தியோகத்தர்களும் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்