தென்னாபிரிக்காவில் இளவயதினரை அதிகம் தாக்கும் மேலுமொரு கொவிட் 19 ரகம்.
பிரிட்டனில் படு வேகமாகப் பரவிவருவதாகச் சொல்லப்படும் வகையான கொவிட் 19 [ VUI-202012/01] தவிர்ந்த மேலுமொன்று தென்னாபிரிக்காவில் பரவிவருவதாக அந்த நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதிக விபரங்கள் தெரியாத இந்த வகைக் கிருமிகள் இளவயதினரைத் தாக்குவதாகவும் ஏற்கனவே பரவிவரும் கொவிட் 19 வகையை விட வித்தியாசமான ஆனால் கடுமையான சுகவீனங்களை உண்டாக்குவதாகவும் அமைச்சர் ஸ்வெலினி ம்கேஸெ [Zwelini Mkhize] தெரிவித்திருக்கிறார்.
தென்னாபிரிக்க ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கும் இந்த வகைக்குத் தற்காலிகமாக 501.V2 என்று குறியிடப்பட்டிருக்கிறது. இவ்வகைகளை நூற்றுக்கணக்கான தென்னாபிரிக்கர்களிடமிருந்து சமீபத்தில் சேமித்து ஆராய்ச்சிக்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பிடம் அனுப்பியிருப்பதாகத் தென்னாபிரிக்கா தெரிவிக்கிறது.
சுமார் 60 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென்னாபிரிக்கா அக்கண்டத்தின் மற்றைய நாடுகளைவிட அதிகமாகக் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 25,000 இறப்புக்களையும் 900,000 தொற்றுக்களையும் கண்டிருக்கும் தென்னாபிரிக்காவின் அமைச்சர் சமீப நாட்களில் தங்கள் நாடு தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்யப் பணம் வசதி இல்லாதிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்