Pfizers/Biontech நிறுவனத்தின் தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பாவிக்க அனுமதி!
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து அனுமதி அமைப்பு (EMA)Pfizers/Biontech தடுப்பு மருந்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவிக்கலாம் என்று பிரேரணை செய்திருக்கிறது. இதற்கான அனுமதி இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்கப்படும் என்பது உத்தியோகபூர்வமானது.
இது ஒரு அவசரகால அனுமதி இந்த மருந்து பாவிக்கப்படும் அதே சமயத்தில் அதன் விளைவுகள் பற்றியும் கவனித்து அவ்வப்போது ஆராயப்படும். வழக்கமாக ஒரு மருந்து அனுமதிக்கப்படும்போது அது சுமார் எட்டு வருடங்களுக்காவது பாவிக்கப்படலாம். இப்போதுள்ள நிலைமையில் ஒரு தடுப்புமருந்தின் அவசியமிருப்பதால் ஒரு வருடத்துக்கான அனுமதி மட்டுமே கொடுக்கப்படும்.
வரவிருக்கும் 27 ம் திகதி முதல் சில ஐரோப்பிய நாடுகளில் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பமாகிறது. நெதர்லாந்து இதை ஜனவரி மாதத்தில் தான் கொடுக்க ஆரம்பிக்கும் என்று அறிவிக்கிறது.
இந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் ஊக்கம் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரும் தொகையொன்று தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்பணமாக. அத்தொகையை இன்னும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடாமலே வைத்திருக்கிறது.
தற்போதுள்ள தயாரிப்பு நிலைமையில் ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றுக்கும் உடனடியாகத் தேவைக்கு அவசியமான தடுப்பு மருந்துகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே ஒன்றிய நாடுகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இது பிரித்துக் கொடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்