ஓய்வுபெற்ற முதியவர்களின் சொத்துக்களை புடுங்கி வந்த சர்வதேசக் குற்றவாளிக் குழு கைப்பற்றப்பட்டது.
ஜெர்மனிய ஓய்வுபெற்ற முதியவர்களை பொலீஸ் வேடம் போட்டு ஏமாற்றி அவர்களுடைய பெறுமதியான பொருட்களைப் புடுங்கிவந்த ஒரு குழுவை ஜேர்மனிய – துருக்கிய பொலீசார் இணைந்து வளைத்துப் பிடித்தார்கள்.
ஏமாற்றுக் குழுவினர் துருக்கியிலிருக்கும் இஸ்மிர் நகரிலிருந்து ஒரு தொலைத்தொடர்பு மையம் மூலம் ஜேர்மனியிலிருக்கும் ஓய்வு பெற்ற முதியவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். முதியவர்களிடம் “உங்களிடமிருக்கும் சொத்துக்கள் [பணம் தங்கம் போன்றவை] சில உங்களிடம் பாதுகாப்பாக இல்லை. எனவே நாங்கள் [ஜேர்மன் பொலீசார்] உங்கள் வீட்டுக்கு அனுப்பும் பொலீஸ் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படையுங்கள், நாங்கள் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கிறோம்,” என்று ஆதரவாகப் பேசி நம்ப வைத்தார்கள். ஜேர்மனியிலிருக்கும் அவர்களது கூட்டாளிகள் பொலீஸ் வேடத்தில் குறிப்பிட்ட முதியவர்களிடம் சென்று அப்பொருட்களைப் பெற்று ஜேர்மனியின் 48 இடங்களில் சேர்த்து வைத்திருந்தார்கள்.
ஜெர்மனியின் அந்த 48 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடித் தாக்குதல் நடாத்தி சுமார் 2 மில்லியன் டொலர் பணம், 5 கிலோ தங்கம், 41 உல்லாசக் கார்கள், உல்லாச விடுதிகள் உட்பட்ட 87 நிலச்சொத்துக்களை அக்குழுவிடமிருந்து பொலீசார் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. 38 பேர் இந்த வேட்டையில் கைதுசெய்யப்பட்டார்கள். அந்த இடங்களில் பலரும் தம் குடும்பங்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர்களை ஜேர்மனி நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்தக் கும்பல் கைப்பற்றப்பட்டபின் இதே போன்ற குற்றங்கள் ஜெர்மனியில் அறவே ஒழிந்துவிட்டதாகப் பெருமையுடன் அறிவிக்கிறது ஜெர்மன் பொலீஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்