சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடி சுவிஸ் வலைவீச்சு.
டிசம்பர் 14 ம் திகதிக்குப் பின்னர் சுவிஸுக்குள் வந்த சுமார் 10,000 பிரிட்டிஷ் குடிமக்களைத் தேடிவருகிறது சுவிஸ். பிரிட்டனில் பரவிவரும் இன்னொரு வகையான கொரோனாத்தொற்றுக்கள் பற்றிய விசாரணைக்காகவே இவர்களிருக்கும் இடங்களை சுவிஸ் அதிகாரிகள் கண்டறிய விரும்புகிறார்கள்.
சுவிஸிலிருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டிடங்கள் மிகவும் பிரசித்தமானவை. சுவிஸுக்குள் நுழைந்திருக்கும் பிரிட்டிஷார் அப்படியான இடங்களுக்கே போயிருக்கலாமென்று நம்பப்படுகிறது. கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவின் பனிச்சறுக்கு விளையாட்டு மையங்களெல்லாம் மூடியே இருக்கின்றன. சுவிஸில் மட்டுமே அவைகள், விரும்பினால் திறந்திருக்கலாம் என்ற தளர்வான கட்டுப்பாடு சில பகுதிகளில் அமுலாக்கப்பட்டது.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டிஷ் மக்களை உள்ளே விடாமல் தடை செய்திருக்கும் இச்சமயத்தில் ஏற்கனவே உள்ளே நுழைந்தவர்களைப் 10 நாட்களுக்கு அவரவர் ஹோட்டல்களில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி சுவிஸ் கேட்டுக்கொள்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்