ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலத்தைத் தூக்கியெறிந்த பேஸ்புக்!
ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரபலமான சமையல்காரர், சமூகவலைத்தளப் பிரபலம், தொலைக்காட்சிப் பிரபலம் கருத்துப் பரப்பாளர் பீட் எவன்ஸைத் தனது தளத்திலிருந்து தூக்கியெறிந்தது பேஸ்புக். காரணம் அவர் கொவிட் 19 பற்றிய பொய்யான விபரங்களைப் பல எச்சரிக்கைகளையும் மீறிப் பரப்பிக்கொண்டிருந்தார் என்பதாகும்.
இவர் நீண்ட காலமாகவே கொவிட் 19 ஒரு கட்டுக்கதையென்றும், அதற்கான தடுப்பு மருந்துகள் வெறும் கண் துடைப்பு என்றும், முகக்கவசங்களைப் போடுவது தேவையற்ற விடயமென்றும், எல்லாமே வெவ்வேறு இரகசியமான சக்திகளால் இயக்கப்பட்டு வருபவை என்றும் கதைகளைப் பல சமூகவலைத்தளங்களிலும் பரப்பிவந்தார். தன்னிடமிருந்த இன்ஸ்டகிராம் [பேஸ்புக் அதன் உரிமையாளர்] பதிவில் தான் பேஸ்புக்கிலிருந்து விலகப்போவதாகச் சொல்லிவந்த இவர் கடந்த வாரம்வரை அதில் கொவிட் 19 க்கான பரீட்சைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் மக்களை உசுப்பேற்றி வந்தார். பேஸ்புக்கிலிருந்து அவரை முதலில் தூக்கிவிட்டு ஏன் சில நாட்கள் இன்ஸ்டகிராமில் விட்டு வைத்திருந்தது என்று அந்த நிறுவனம் விளக்கமேதும் கொடுக்கவில்லை.
“எங்கள் தளங்களில் கொவிட் 19 பற்றிய விபரங்களைத் திரிபுபடுத்துவது பற்றியும் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் தெளிவான எல்லைகள் இருக்கின்றன. அவைகளை மீறுபவர்களை நாம் கண்டிப்புடன் நீக்குவோம்,” என்று பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் பீட் எவன்ஸ் ஒரு குறிப்பிட்ட இயந்திரத்தைப் பற்றி விபரித்து அது கொவிட் 19 ஐக் குணப்படுத்துகிறது என்று விளம்பரம் செய்ததற்காக 25,000 டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்