ஒழுங்காகப் பணம் செலுத்தாததால் ஈராக்கின் மின்சாரத்தை அணைக்கும் ஈரான்.
தனது பக்கத்து நாட்டை முடிந்தவரை பல வழிகளிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் ஈரான் அதேசமயம் அவர்களிடம் வர்த்தகம் செய்து சம்பாதிக்கவும் தயங்குவதில்லை.
பல வருடப் போர்களினால் ஈராக்கின் எரிநெய் உற்பத்தி மோசமாக இருக்கிறது. பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஈராக் தற்போதைய நிலையில் ஈரானிடமிருந்து எரிவாயுவை வாங்கி அதன்மூலம் நாட்டின் மின்சாரத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.
வெளிநாடுகளிடம் வர்த்தகம் செய்ய அமெரிக்காவால் தடை போடப்பட்டிருக்கும் ஈரான் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு தடவைக் கொள்வனவின் போது அமெரிக்காவிடம் பிரத்தியேக அனுமதி பெற்றே ஈராக் தன் பக்கத்து நாட்டிடம் கொள்வனவு செய்யவேண்டும். ஈராக் தனது எரிநெய்த் தயாரிப்பை மீண்டும் முடுக்கிவிட்டு அவ்விடயத்தில் தன்னிறைவு செய்துகொள்ளவேண்டுமென்று கட்டாயப்படுத்தும் அமெரிக்கா, சமீப மாதங்களில் ஈரானிடம் கொள்வனவு செய்ய அனுமதிப்பதை இழுத்தடித்து வருகிறது. கஜானா வறண்ட நிலையிலிருக்கும் ஈராக் தனக்குக் கடனாக எரிவாயுவைக் கொடுக்கும் ஈரானுக்கான பெரும் தொகையைக் கொடுக்க வழியில்லாமலிருப்பதால் அவர்களுக்கு விற்கும் எரிவாயுவில் சிறு பகுதியையே கொடுக்க முன்வருகிறது ஈரான்.
விளைவாகக் குளிர்காலத்தில் அதிக மின்சாரம் தேவையான நிலையில் அதைத் தனது மக்களுக்குக் கொடுக்கவியலாத நிலையிலிருக்கிறது ஈராக். கட்டாத கடன் தொகை பற்றிப் பேசுவதற்காக ஈராக்குக்கு விஜயம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் ஈரானிய எரிசக்தி அமைச்சர் அர்டாகானியான்.
சாள்ஸ் ஜெ. போமன்