ஸ்பெயினில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மறுப்பவர்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும்!
ஒரு நபருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க மருத்துவத் திணைக்களம் முன்வந்து அதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும் என்கிறது ஸ்பெயின்.
“எமது நாட்டில் இந்தப் பெருந்தொற்றை முழுசாக ஒழித்துக்கட்டுவதில் திடமாக இருக்கிறோம். எனவே சகல மக்களுக்கும் நாம் அதைக் கொடுக்க விளைகிறோம். எந்தக் காரணத்தினாலாகினும் அதை மறுப்பவர்களின் விபரங்களைப் பதிவுசெய்துகொண்டு அவற்றை மற்றைய ஒன்றிய நாடுகளின் அரச திணைக்களங்களுடன் பகிர்ந்துகொள்வதே எங்கள் நோக்கம்,” என்கிறார், ஸ்பெயினின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.
தடுப்பு மருந்தை மறுப்பவர்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிட்ட நபர் வேலை செய்யும் இடத்தில் பகிரப்படாது பாதுகாப்பாக இரகசியமாக அரசின் ஆவணங்களில் மட்டுமே இருக்கும் என்கிறது ஸ்பெயின்.
சுமார் 1,9 மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு 50,000 பேர் இவ்வியாதியால் இறந்திருக்கிறார்கள். மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே நாட்டில் நடுநிசியில் வெளியே போகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பு மருந்து எல்லோருக்குமே இலவசமாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் மாத நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின்படி ஸ்பெயின் மக்களில் பாதிப்பேர் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். டிசம்பர் மாதத்தில் அந்த எண்ணம் 28 விகிதம் பேர் மறுப்பதாகக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்