தன் நாட்டு நிறுவனங்களின் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்க சீனாவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
2030 ஆண்டுக்குள் நாட்டின் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயுவை வெளியேற்றுதலைக் கணிசமாகக் குறைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது சீனா. அதை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் பல வருடங்களாக அமுல்படுத்தப்படும் கரியமிலவாயு வெளியேற்றும் உரிமையை விற்றல் வாங்கல் சந்தையை (national carbon emissions trading scheme) அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் செயற்பட்டுவரும் திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவு கரியமிலவாயுவை வெளியிடும் உரிமை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் அளவுக்கேற்றபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமது வெளியேற்றலைக் குறைக்கும் நிறுவனங்கள் அதை மற்ற நிறுவனங்களுக்கு விற்று இலாபம் சம்பாதிக்கலாம். அதாவது சூழலை மாசுபடுத்துவதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக நிறுவனங்கள் தமது மாசுபடுத்தலைக் குறைப்பதால் இலாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலைமை உண்டாக்கப்பட்டிருக்கிறது.
தமது மாசுபடுத்தலைக் குறைப்பவர்கள், தம்மிடமிருக்கும் மேலதிக கரியமிலவாயு வெளியேற்றும் உரிமையை அதற்கான சந்தையில் அதிக விலைக்கு விற்கலாம். அதை அதிகமாக மாசு செய்யும் நிறுவனங்கள் வாங்கவேண்டியிருக்கும். மாசுபடுத்தலின் விலை அதிகமாவதால் நிறுவனனங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பாவித்துத் தமது மாசுபடுத்தலைக் குறைத்து வருகின்றன.
ஐரோப்பாவின் இந்தத் திட்டமே இதுவரை உலகில் பெரிய அளவிலான கரியமிலவாயு வெளியேற்ற உரிமைக்கான சந்தையாக இருந்தது. சீனா அதை அறிமுகப்படுத்தும்போது சீனாவின் இதற்கான சந்தை உலகின் மிகப்பெரும் சந்தையாகிறது.
ஆனாலும், சீனா ஒரு முதலாளித்துவ நாடாக இல்லாததால் அத்திட்டம் அங்கே பெரிதாக மாசுபடுத்தலைக் குறைக்காது என்று கருதுகிறார்கள் சூழலியலாளர்கள். கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் அவ்விலை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. அது மிகவும் குறைவாகவும் இருக்கிறது. அரசே நிறுவனங்கள் பெரும்பாலானவற்றை இயக்குவதால் அங்கே மாசுபடுத்தல் உரிமைக்கான சந்தையில் விலைகள் அதிகரிக்கச் சந்தர்ப்பமில்லை என்று கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் இப்படியான சந்தை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் விலை குறைவாக இருந்ததால் சூழலில் மாசு ஏற்படுவதைப் பெரிதாகக் குறைக்கவில்லை. ஆனால், சமீப வருடங்களில் மாசுபடுத்தும் உரிமைக்கான விலைகளை ஒன்றியம் அதிகமாக்கி, அதன் அளவையும் குறைத்திருப்பதால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்து நிறுவனங்கள் பலவும் தமது கரியமிலவாயு வெளியிடலைக் குறைத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்