வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகழுவியதால் பங்களாதேஷின் ஒன்பது நிலக்கரிச் சக்தி நிலையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச ரீதியில் அப்படியான திட்டங்களை நிறுத்திவிடவேண்டுமென்ற நிலைப்பாடு எழுந்திருக்கிறது. எனவே, திட்டமிட்டிருந்த ஒன்பது நிலக்கரியால் இயங்கும் சக்தி மையங்களை பங்களாதேஷ் கிடப்பில் போடுகிறது.
ஏற்கனவே பங்களாதேஷால் தன்னிடமிருக்கும் நிலக்கரிச் சக்தி மையங்களிலிருந்து முழுப் பலனையும் பெற முடியவில்லை. அவைகளின் 40 % வேலைகளையே பங்களாதேஷால் பாவிக்க முடிகிறது. அதன் காரணம் பங்களாதேஷுக்கு நிலக்கரி விற்றுவந்த இந்தோனேசியாவுடன் சீனால் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நிலக்கரியை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. எனவே, பங்களாதேஷ் ஒதுக்கப்பட்டுவிட்டது.
சக்தியை உண்டாக்கும் இயந்திரங்கள் முழுவதுமாகச் செயற்படுத்தப்படாவிட்டாலும் கூட, இருக்கும் மையங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு அவைகளுக்கான முழுச் செலவையும் பங்களாதேஷ் அரசு கொடுத்தே ஆகவேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் முக்கிய முதலீட்டாளர்களான The Asian Development Bank, Asian Infrastructure Investment Bank ஆகியவை மாசுபடுத்தும் சக்தியைத் தயாரிப்பதில் தாம் தொடர்ந்தும் பங்களிக்க முடியாதென்று அறிவித்திருக்கின்றன.
அதேபோலவே தென்கொரியா. ஜப்பான் போன்ற நாடுகளும் தமது நாடுகளின் கோட்பாடாக “சூழலை மாசுபடுத்தும் நிலக்கரிச் சக்தியை ஒழித்துக்கட்டுவது,” என்று முடிவெடுத்திருப்பதால் பங்களாதேஷுக்கு அவர்களிடமிருந்து கிடைத்துவந்த உதவிகளும் இவ்விடயத்தில் இனிக் கிடைக்காது.
தற்போதைய நிலையில் பங்களாதேஷ் தனது 1.5 % எரிசக்தியை மட்டுமே சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத இயற்கை வளங்கள் மூலம் உருவாக்கி வருகிறது. நிலக்கரிச் சக்தியைக் கைவிடவேண்டுமென்ற சர்வதேச நிலைப்பாட்டினால் உதவி செய்பவர்கள், முதலீட்டாளர்கள் பின்வாங்கி விட்ட நிலையில் பங்களாதேஷ் தனது நாட்டின் எரிசக்திக்கான மூலத்தை மாற்றிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்