போர்களினால் அகதிகளாகிறவர்களை விட இயற்கை அழிவால் புலம்பெயர்கிறவர்கள் அதிகமாகிறார்கள்.

சுற்றுப்புற சூழல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தமது வாழ்வாதாரங்களை இழந்து புலம்பெயர்கிறவர்கள் தொகை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2019 இயற்கை அழிவால் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன் பேராகும்.

நாட்டுக்குள் புலம்பெயர்பவர்களைக் கணிப்பிடும் புள்ளிவிபர அமைப்பு[Internal Displacement Monitoring Centre] வெளியிட்டிருக்கும் விபரங்களிலிருந்து 8.6 மில்லியன் பேர் கலவரங்கள், போர்களால் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்றும் வெள்ளம், சூறாவளி, புயல், வறட்சி, மண் அரிப்பு போன்றவைகளால் தாக்கப்பட்டுச் சுமார் 25 மில்லியன் பேர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. இயற்கையின் தாக்குதல்களால் அவர்கள் வீடுகளை, நிலத்தை வாழ்வாதாரத்தை இழந்ததால் வேறிடங்களுக்குப் புலம்பெயர்கிறார்கள்.

2008 லிருந்தே இயற்கையின் தாக்குதல்களால் புலம்பெயர்கிறவர்களின் எண்ணிக்கை போர்கள், கலவரங்களால் வேறிடங்களுக்கு மாறுபவர்களை விட அதிகமாகிவிட்டது. கொங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளின் போர்களால் சகலமுமிழந்தார்களை விட சீனா, இந்தியா,பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் மற்றும் சில தென்னமெரிக்க நாடுகளில் உண்டாகிய இயற்கையழிவுகள் பலரைத் தாக்கியிருக்கிறது. 

இயற்கையழிவால் தமது வீடுகளை, நிலங்களை விட்டுப் பெயர்கிறவர்கள் அனேகமாகத் தமது நாட்டுக்குள் பெரும் நகரங்களுக்கு அல்லது பக்கத்து நாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்கள். அவர்கள் திரும்பித் தமது பிரதேசத்துக்கு வருவது அரிது. எந்தக் காரணத்திற்காகப் புலம்பெயர்ந்தாலும் அதன் விளைவாக நிலம், உணவு, வேலைகள் போன்றவற்றுக்காக மனிதர்கள் போட்டியிட ஆரம்பிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *