தமது கடற்கரையின் சூழலை அசுத்தமாக்கியது ஈரானின் திட்டமிட்ட செயல் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.
லிபிய அரசுக்குச் சொந்தமான எமரால்ட் என்ற கப்பலே மத்தியதரைக் கடலில் திட்டமிட்டு இஸ்ராயேல் கடற்கரையையொட்டிப் பயணம் செய்து கரியெண்ணெயைக் கொட்டியதாகத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக இஸ்ராயேல் சுற்றுப்புற சூழல் அமைச்சர் தெரிவித்தார். அக்கப்பல் ஈரானிலிருந்து சிரியாவுக்குப் போன வழியிலேயே இக்குற்றத்தைச் செய்ததாக ஜீலா கமலியேல் குற்றஞ்சாட்டுகிறார்.
ஈரானிலிருந்து புறப்பட்ட எமரால்ட் இஸ்ராயேல் – லெபனான் கடற்கரையருகில் பெப்ரவரி 1- 2 ம் திகதி முழு நாளும் செலவழித்து கரியெண்ணையைக் கடலில் கொட்டியது. அச்சமயத்தில் அக்கப்பல் தனது இருப்பை அடையாளம் காட்டும் கருப்புப் பெட்டியை அணைத்துவிட்டிருந்தது. அதன் பின் சிரியாவுக்குச் சென்ற கப்பல் அங்கே தனது கருப்புப் பெட்டியை செயல்படவைத்த்துவிட்டு மீண்டும் ஈரானுக்குத் திரும்பிவிட்டது.
மேற்கண்ட விபரங்களைத் தமது இரண்டு வார ஆராய்வுகளின் பின்னர் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடும் இஸ்ராயேல், அதற்கான குற்றவாளியாக முதலில் ஒரு கிரேக்கக் கப்பலைக் குற்றஞ்சாட்டியிருந்தது. கிரேக்க அரசின் உதவியுடன் கிரீஸ் சென்று அக்கப்பலை ஆராய்ந்து அது தவறான முடிவு என்று புரிந்துகொண்ட பின்னரே எமரால்ட் குற்றவாளியாக அடையாளம் காட்டப்படுகிறது.
“ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யும் முயற்சியில் எங்கள் நாட்டை மிரட்டுவதுடன் இப்போது சூழல் அழிப்புத் தீவிரவாத நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்,” என்கிறார் அமைச்சர்.
குறிப்பிட்ட கப்பலில் கரியெண்ணையை அனுப்பிக் கடலில் கொட்டவைத்தது ஈரானின் திட்டமிட்ட செயலே என்று குறிப்பிடும் இஸ்ராயேலின் ஆதாரம் இதுவரை சந்தர்ப்பங்களையும், தொழில்நுட்ப விபரங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. இந்த ஆதாரங்களை அமெரிக்க, ஐரோப்பிய செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் இஸ்ராயேல் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட கப்பலில் இருந்துவந்த கரியெண்ணெய் தானா இஸ்ராயேல், லெபனான் கடற்கரைகளை அடைந்திருக்கிறது என்ற ஆராய்ச்சி இன்னும் நடாத்தப்படவில்லை.
எமரால்ட் கப்பல் தற்சமயம் ஈரானில் நிறுத்தப்பட்டிருப்பதால் அதற்கான அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியது.
சாள்ஸ் ஜெ. போமன்