ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய்க்கட்சி ஹங்கேரிய ஆளும்கட்சியான Fidesz ஐ வெளியேற்றுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் தமது குரலை ஒன்றாக்கிப் பலப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் தனித்தனியாகச் செயற்படும் கட்சிகள் அணிகளை உண்டாக்கியிருக்கின்றன. அவைகளில் ஒன்றான ஐரோப்பிய மக்கள் கட்சிக்குள்ளிருந்த ஹங்கேரியின் பீடெஸ் கட்சியை வெளியேற்றத் தாய்க்கட்சி முடிவெடுத்தது. தங்களை அக்கட்சி துரத்தக்கூடாது என்ற எண்ணத்தில் ஹங்கேரியக் பீடெஸ் தானாகவே விலகிக்கொள்வதாகக் கட்சித்தலைவர் விக்டர் ஒர்பான் அறிவித்திருக்கிறார்.

43 நாடுகளிலிருந்து 83 கட்சிகளைத் தன்னகத்தே ஒன்றாக இணைத்துக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் அணியாகச் செயற்படும் கட்சி [European People’s Party]ஐரோப்பிய மக்கள் கட்சி. ஐரோப்பாவின் கிறிஸ்தவக் கோட்பாடு, பழமைபேணும் கோட்பாடுகளைக் கொண்ட கட்சிகள் இந்த அணியில் செயற்படுகின்றன. அதே சமயம் இக்கட்சியின் அடிப்படையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகக் கோட்பாடுகளையும், சட்டம் ஒழுங்கை மதித்துச் செயல்படும் இயக்கங்களை ஆதரிப்பதும் இருந்து வருகிறது.

ஐரோப்பாவில் தங்களது அணிக்குள் இருந்துகொண்டு, செயற்படும் நாடான ஹங்கேரியில் ஜனநாயகத்தைப் பல வழிகளிலும் மிதித்து ஒரு கட்சி ஆதிக்கத்தை நிலை நாட்டி, நீதித்துறையையும் தனது கைகளுக்குள் போட்டுக்கொண்டு பல ஆண்டுகளாகவே செயற்பட்டு வருகிறது பீடெஸ் கட்சி. அதனால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகப் பல தடவைகள் தாய்க்கட்சி எச்சரித்தும் விக்டர் ஒர்பான் அதைத் துச்சமாக தூக்கியெறிந்து வந்தார்.

ஆனாலும், பீடெஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலம் அது மேலும் வலதுசாரியாகி, பிற்போக்குப் பழமைவாதத்திலும், நிறவெறி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என்பதால் அதை விலக்க அனுமதிக்காமல் அணைத்து வந்தது ஜெர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி. ஆனால், தொடர்ந்தும் தனது பாணியில் அதிகாரப் போக்கில் போய் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடைஞ்சல் செய்துவரும் பீடஸ் கட்சியைத் தொடர்ந்தும் ஆதரிக்க முடியாததால் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி அதைக் கைகழுவிவிட்டது.

எனவே இன்று நடந்த தாய்க்கட்சிக் கூட்டத்தில் பீடெஸ் கட்சியை வெளியேற்றுவதாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதையடுத்தே ஹங்கேரியின் ஆளும் கட்சியான பீடெஸ் தலைவர் தாம் விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *