“எங்களுக்குத் தரவேண்டியதைத் தந்துவிட்டு ஏற்றுமதி செய்,” அஸ்ரா செனகாவிடம் ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அஸ்ரா செனகா நிறுவனம் தருவதாக ஒத்துக்கொண்ட அளவு தடுப்பு மருந்துகளைக் கொடுக்காதது பற்றி இரு தரப்பாருக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் பனிப்போரின் அடுத்த காட்சியாக இன்று அந்த நிறுவனம் ஆஸ்ரேலியாவுக்கு அனுப்ப எத்தனித்த தடுப்பு மருந்துகளை ஐ.ஒன்றியமும் இத்தாலியும் தடுத்துவிட்டன.
இத்தாலியிலிருக்கும் தனது அனாய்னி தயாரிப்பு நிலையத்திலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு 250,000 தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி கேட்டிருந்தது. அதற்கான அனுமதியைக் கொடுக்காத இத்தாலிய அரசை ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய குழுவும் ஆதரித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தருவதாக அஸ்ரா செனகா நிறுவனம் உறுதியளித்திருந்த 90 மில்லியன் தடுப்பு மருந்துகளில் 40 மில்லியன்களையே கொடுக்க முடியும் என்று முதலில் எண்ணிக்கையைக் குறைத்த அஸ்ரா செனகா, பின்னர் அதிலும் பாதியையே தன்னால் தயாரித்துக் கொடுக்க முடியும் என்றது. மீதியை ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து எடுப்பித்து இரண்டாம் காலாண்டில் தரக்கூடும் என்று குறிப்பிடுகிறது.
எனவே ஐரோப்பாவுக்குள் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளை வெளியே ஏற்றுமதி செய்யமுடியாமல் தடுத்துவிடும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருந்தது. அதன் முதல் கட்டமாகவே இத்தாலியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தடை போடப்பட்டது. சாள்ஸ் ஜெ. போமன்