புர்க்கா, நிக்காப் ஆகியவற்றைத் தடை செய்யலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் சுவிஸ்.
ஒரு பக்கத்தில் கொரோனாத் தொற்றுப் பரவாதிருக்க முகக்கவசம் அணிந்து கொள்ளும் ஐரோப்பா மென்மேலும் பாதுகாப்பான முகக்கவசம் எதுவென்று வாதிட்டுக்கொண்டிருக்கிறது. அதே சமயம் பெல்ஜியம், பிரான்ஸ் வழியில் நாடு முழுவதும் புர்க்கா, நிக்காப் ஆகிய இஸ்லாமியப் பெண்கள் அணியும் முகக்கவசத்தை அணியவும், ஊர்வலங்களில் போகிறவர்கள் முகத்தை மறைக்கும் கவசத்தை அணியவும் தடை போடலாமா என்று கேட்டு மக்களைச் சந்திக்கிறது சுவிஸ்.
ஞாயிறன்று நடக்கவிருக்கும் வாக்கெடுப்புகள் மூன்றில் புர்க்கா போன்றவையைத் தடை செய்வது பற்றியது தவிர, இந்தோனேசியாவுடன் கட்டுப்பாடுகளின்றி வர்த்தகம் செய்யலாமா, எலக்ரோனிக் அடையாள அட்டையை அனுமதிக்கலாமா ஆகிய கேள்விகளுக்கும் சுவிஸ் மக்கள் பதிலளிக்கவிருக்கிறார்கள். இந்தோனேசியா இயற்கைக் காடுகளை அழித்து பாமாயில் தயாரிப்பதால் அவர்களுடன் வர்த்தகம் செய்வது தவறு என்று சூழல் ஆர்வலர்கள் அதை எதிர்க்கிறார்கள். எலக்ரோனிக் அடையாள அட்டை தனியார் உரிமைகளுக்கு எதிரானது என்று ஒரு சாரார் கருதுகிறார்கள்.
இம்மூன்றிலும் புர்க்கா தடை வாக்கெடுப்பே சர்வதேசத்தின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இது வலதுசாரி நிறவாதிகளின் இஸ்லாமிய எதிர்ப்பு வெறியென்று நீண்ட காலமாகவே முஸ்லீம்களில் ஒரு சாரார் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆனாலும், கொரோனாக்கால முகக்கவச அவசியத்துடன் ஒப்பிடும்போது இச்சமயத்தில் இந்த வாக்கெடுப்பை நடாத்துவது வினோதமானது என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்