பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடிப்பா?
பிரான்ஸில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பராமரிப்பாளர்கள், மருத்துவிச்சிகள், வீடுகளில் சுகாதார உதவி புரிவோர் சகலருக்கும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தடுப்பூசியை ஏற்றிக் கொண்டோரது எண்ணிக்கை போது மானதாக இல்லை என்று சுட்டிக்காட்டப் படுகிறது.
இந்தப் பின்னணியிலேயே தடுப்பூசி ஏற்றுவதை வலியுறுத்தும் அறிவிப்பை சுகாதார அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
“மூதாளர் பராமரிப்பு இல்லங்களைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்களில் 40 வீதத்தினரும் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களில் 30 வீதத்தினருமே இதுவரை தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள் ளனர். இது ஊக்கமளிக்கின்ற செய்தி தான் என்றாலும் போதுமான தரவு அல்ல. மருத்துவ மையங்களில் ‘அஸ்ராஸெனகா’ தடுப்பூசி போதியளவு கையிருப்பில் உள்ளது. எனவே சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.”
” இதுவரை ஊசி ஏற்றிக் கொள்ளதவர் கள் உடனடியாக அதனைச் செய்யுங்கள். எங்கள் பாதுகாப்புக்கு, எங்கள் சுகாதாரக் கட்டமைப்புகளது வலிமைக்கு அது அவசியமானது. “
-இவ்வாறு சுகாதார அமைச்சர் தனது ருவீற்றர் செய்தி ஒன்றின் மூலம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக் கிறார்.
மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை பிரதமரும் நேற்று செய்தியாளர் மாநாட்டில் வெளியிட் டிருந்தார். சுகாதாரத் துறையில் மூவரில் ஒருவர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவலையும் பிரதமர் சுட்டிக்காட்டி இருந்தார்.
50 வயதுக்குட்பட்ட சுகாதாரப் பணியாளர் கள் தடுப்பூசி தொடர்பில் ஆர்வம் கொண்டவர்களாக இல்லை என்று கூறப்படுகிறது. வேறு சில மதிப்பீடு களின்படி அஸ்ராஸெனகா தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட பக்க விளைவுகளும் சுகாதாரப் பணியாளர்களின் பின்னடிப் புக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது.
மருத்துவப் பணிபுரிவோர் சில ஆபத்தான தொற்று நோய்களுக்குரிய தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். அதன்படி கொரோனா தடுப்பூசி மருந்தையும் கட்டாயமாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கக் கூடும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.