எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக வரவிருக்கும் எத்தியோப்பியத் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன.

நீண்ட காலமாக நாட்டுக்குள்ளிருந்த கலவரங்களையும், பக்கத்து நாடுகளுடனிருந்த போர்களையும் நிறுத்திப் பேச்சுவார்த்தைகளால் சமாதானம் செய்துகொண்ட எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அஹமது சமாதானத்துக்கான நோபல் பரிசையும் வென்றார். அவரது முயற்சியால் ஆயுதப் போரிலீடுபட்டிருந்த குழுக்கள் அரசியல் களத்தில் ஜனநாயகச் செயற்பாட்டுக்கு இறங்கிவந்திருந்தன. 

இதனால் சர்வதேச ரீதியில் அபிமானத்தைச் சேகரித்துக்கொண்ட அபிய் அஹமதுவின் அதிகாரங்களை மத்திய அரசிடம் ஒருமைப்படுத்தும் திட்டம் நொண்ட ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக எத்தியோப்பியாவின் முக்கிய மாநிலங்களிலொன்றான திகிராய் மத்திய அரசுடன் முட்டிக்கொள்ள அங்கு ஒரு போர் ஆரம்பித்தது. மத்திய அரசு தன் மாநிலத்தின் மீது போர் தொடுத்து நவம்பரில் ஆரம்பித்த போர் தொடர்கிறது. 

https://vetrinadai.com/news/tigray-war-crimes/

இருட்டடிக்கப்பட்ட திகிராய் போர் ஒரு பக்கமிருக்க எத்தியோப்பியா ஜூன் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்தவிருக்கிறது. தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள் தமது பங்கெடுப்பை அறிவிக்கவேண்டிய நாள் நேற்று [05-03] ஆகும். 

 நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பெரும்பான்மை இனத்தவரின் அங்கத்துவத்தைக் கொண்ட Oromo Liberation Front கட்சி தனது பெயரைத் தேர்தலுக்காகப் பதிவுசெய்துகொள்ளவில்லை. முன்று தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கட்சியைச் சட்டபூர்வமாக்கி ஜனநாயக அரங்குக்குக் கொண்டுவந்தது அபிய் அஹமது செய்த முக்கிய செயலாக சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருந்தது. இப்போதுஅக்கட்சி மீண்டும் ஜனநாயக அரங்கிலிருந்து வெளியேறுவது எத்தியோப்பியாவின் ஸ்திரத்தை கலங்கவைப்பதாக இருக்கிறது.

ஏற்கனவே ஒரோமோ இனத்தவரின் இன்னொரு கட்சியான Oromo Federalist Congress நாட்டில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான கால நிலை அற்றுப் போய்விட்டதாகக் குறிப்பிட்டுக் கடந்த வாரத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

நீண்ட காலமாக ஒரோமோ இனத்தவர்கள் அபிய் அஹமதின் அரசுக்கெதிராகக் கொடியேந்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் அரசு அவர்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிடத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. திகிராய் மாநிலம் போலவே எத்தியோப்பியாவின் இன்னொரு முக்கிய பகுதியான ஒரோமியாவில் பாகத்திலிருந்து நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த மிச்சமாக இருப்பது பிரதமர் அபிய் அஹமதின் கட்சியாகும். 

நாட்டின் ஜனநாயகம் கடுமையாக நொண்டிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் போர் நடந்துகொண்டிருக்கும் திகிராய் மாநிலத்தினுள் போய் அங்கே நடந்ததாகக் குறிப்பிடப்படும், போர்க் குற்றங்கள் பற்றி ஆராய அனுமதிக்கும்படி ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை எத்தியோப்பிய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *