எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் செனகல் நாட்டில் சரித்திரம் கண்டிராத மக்கள் போராட்டம்.
நீண்ட காலமாகவே ஸ்திரமான அரசியல் காலநிலையுடனிருந்த மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கடந்த சில நாட்களாகப் பேரணிகளும், ஊர்வலங்களும் வெடித்திருக்கின்றன. காரணம், வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மான் சொங்கோ புதனன்று கைது செய்யப்பட்டிருப்பதாகும்.
46 வயதான உஸ்மான் சொன்கோ இளவயதினரே பெரும் ஆதரவைப் பெற்றவராக இருக்கிறார். அவர் தற்போதைய ஜனாதிபதி மக்கி சல்லுக்கு அடுத்ததாகப் பதவிக்கு வரக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொங்கோவைக் கைது செய்திருப்பதன் காரணம் அரசியலே என்றும் அவரைச் சிறைக்குள் தள்ளுவதன் மூலம் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதே என்றும் எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.
பிரான்ஸின் காலனித்துவ ஆட்சிக்குள்ளிருந்து சுதந்திரம் பெற்ற நாடான செனகலில் ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் தான் பதவியில் இருக்கலாம். 2019 இல் நடந்த தேர்தலில் சொங்கோ 16 விகித வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துத் தனது செல்வாக்கை இளைய சமுதாயத்தினரிடையே பெருக்கியிருக்கிறார். 2024 தேர்தலில் தான் பங்குபற்றுவதைத் தடுப்பதற்காக ஜனாதிபதி மத்தி சல் முயற்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார் சொங்கோ.
சொங்கோ கைது செய்யப்படும்போது சுமார் நூற்றுக்கணக்கானவர்களுடன் ஆரம்பித்த ஊர்வலங்கள், நீதிமன்றத்தில் அவர்மீது கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறியதாகவும், கலவரங்களைத் தூண்டிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டதை அறிந்த பின் கணிசமாக அதிகரித்து நாடெங்கும் பரவியிருக்கிறது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சொங்கோ திங்களன்று மீண்டும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்படுவார் என்று உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. ஊர்வலத்தில் ஏற்பட்ட அத்துமீறல்களை நிறுத்த நடாத்த துப்பாக்கிச் சூடுகளால் நால்வர் இறந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்