நைல் நதியை மறித்து எத்தியோப்பியா கட்டிவரும் அணையால் பக்கத்து நாடுகளுடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்கிறது.
நைல் நதியின் 85 விகிதமான நீரைக் கொண்ட நீல நைல் நதியை மறித்து எத்தியோப்பியா 2011 முதல் கட்ட ஆரம்பித்திருக்கும் Grand Ethiopian Renaissance Dam ஆல் நைல் நதி நீரில் தங்கியிருக்கும் மேலுமிரண்டு நாடுகளான சூடானும், எகிப்தும் தமது அதிருப்தியைக் காட்டி வருகின்றன. இது பற்றிய பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
சூடானின் சர்வாதிகாரி ஒமார் அல்-பஷீர் வீழ்த்தப்பட்ட பின் முதல் தடவையாக சூடானுக்கு விஜயம் செய்திருக்கும் எகிப்தியத் தலைவர் அப்துல் பத்தா அல்- சிசி “அந்த அணை கட்டப்படுவது என்பது பேச்சுக்கு அப்பாற்பட்ட விடயம்,” என்று கண்டிப்பாகக் குறிப்பிடுகிறார். சூடானோ, எகிப்தோ தற்போதைய எத்தியோப்பியாவின் குறிப்பிட்ட அணை கட்டி இயக்கப்படுவதை முற்றாகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.
சூடானின் எல்லைக்கு வெளியே சுமார் 15 கிமீ தூரத்தில் கட்டப்பட்டு வரும் எத்தியோப்பியாவின் அணைக்கட்டானது செயற்பட ஆரம்பிக்கும்போது ஆபிரிக்காவின் மிகப்பெரியதானதாகவும் உலகின் ஏழாவது பெரியதாகவும் இருக்கும். அணையின் மூன்றிலிரண்டு பகுதிக் கட்டட வேலை 2019 இல் முடிந்திருக்கிறது. மொத்த வேலையும் முடிந்தபின் சுமார் 5 – 10 வருடங்களின் பின்னரே அணைக்கட்டின் நீர்ப்பரப்பு முழுதாக நிறைக்கப்படும். அது அப்பிராந்தியத்தில் ஏற்படும் மழைவீழ்ச்சியைப் பொறுத்ததாக இருக்கும்.
நைல் நதியிலிருந்து வரும் நீரில்தான் எகிப்தின் 90 விகிதமான நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. நைல் நீரில் சூடானிலிருக்கும் வேறு அணைக்கட்டுகளும் தங்கியிருக்கின்றன. எத்தியோப்பிய அணைக்கான நீர் சேகரிக்கப்படும்போது தமது நாடுகளுக்குத் தேவையான நீர் கிடைக்காமல் போகும் நிலைமை வருமென்று இவ்விரு நாடுகளும் நியாயமாகவே அஞ்சுகின்றன. அணைக்கட்டை ஆறு வருடங்களிலேயே நிறைக்க எத்தியோப்பியா விரும்ப எகிப்தோ அதை 10 -20 வருடங்கள் எடுத்து நிறைக்கலாம் என்கிறது.
நைல் நதியில் தங்கள் நீர்த்தேவைக்காகத் தங்கியிருக்கும் இந்த மூன்று நாடுகளுக்குமிடையே 1959 இல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்தமொன்றின்படி எகிப்துக்கும், சூடானுக்கும் நைல் நதி நீரில் முழுவதுமான உரிமைகள் இருக்கின்றன. அத்துடன் எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் அனுமதியின்றி அந்த நதியில் எவ்வித குறுக்கீடுகளையும் செய்ய எவருக்கும் உரிமையில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. 2011 இல் எத்தியோப்பியா அணைக்கட்டை ஆரம்பிக்கும்போது எகிப்தில் வெடித்திருந்த அரசியல் சூழ்நிலையால் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில்லாமலே எத்தியோப்பிய அணைக்கட்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணைக்கட்டிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை மலிவான விலைக்கு சூடானுக்குக் கொடுக்க எத்தியோப்பியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. எகிப்து முழுவதுமாகவே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
நைல் நதி நீர்ப் பிரச்சினை அந்த மூன்று நாடுகளுக்குமிடையே போரை உண்டாக்கக்கூடிய மிகப்பெரும் சிக்கலென்பதால் அமெரிக்கா மற்றும் சர்வதேச ஈடுபாட்டால் அமைக்கப்பட்ட ஒரு குழு அவர்கள் மூவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாட்டை உருவாக்க முயன்று வந்தாலும் இதுவரை எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
தற்போது தாம் கடந்த ஆண்டுக்கான நீரை அணையில் நிறைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தமது திட்டப்படி நீல நதியிலிருந்து நீரை எடுக்கப்போவதாகவும் எத்தியோப்பியா அறிவித்திருக்கிறது. 1959 ஒப்பந்தத்தால் தாம் கட்டுப்படுத்தப்பட முடியாது என்கிறது எத்தியோப்பியா. ஏற்கனவே இருக்கும் அணைக்கட்டு ஒப்பந்தக் குழுவுடன் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவைகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயாரென்று குறிப்பிடும் எகிப்து எத்தியோப்பியாவின் தற்போதைய நிலைப்பாட்டை சூடானுடன் சேர்ந்து முழுவதுமாக எதிர்த்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்