கிரீஸின் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதமிருக்கும் இடதுசாரித் தீவிரவாதி.

சிறைச்சாலைக்குள் தான் நடத்தப்படும் விதத்தில் திருப்தியில்லை என்று குறிப்பிட்டு இரண்டு மாதமாக உண்ணாவிரதமிருக்கிறார்  டிமித்திர்ஸ் குபொர்டினாஸ். உணவை மறுத்ததுமன்றி நீரருந்தவும் மறுத்ததால் உடல் நிலை மோசமாகிப்போய் அவசர காலச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவர்.

குபொர்டினாஸின் உடல்நிலையானது கிரீஸில் அரசியல் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துச் சிறைக்குள் ஒரு கைதி முதல் தடவையாக இறந்துபோவது கிரீஸில் என்ற பெயர் நாட்டுக்கு அவப்பெயராகக்கூடாதென்கிறது எதிர்க்கட்சி. குபொர்டினாஸ் போலவே கோட்பாடுகள் கொண்ட எதிர்க்கட்சி அவரைக் காப்பாற்ற முற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி எதையும் செய்ய மறுத்து வருகிறது ஆளும் கட்சி.

நவம்பர் 17 என்று குறிப்பிடப்படும் இடதுசாரித் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த குபொர்டினாஸ் பல தடவைகள் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார். 1975 – 2000 ஆண்டுகளுக்குள் நாட்டில் ஒரு டசினுக்கும் அதிகமான கொலைகளை அக்குழு செய்திருக்கிறது. செல்வந்தர்கள், வெளி நாட்டுத் தூதுவராலய ஊழியர்கள், பிராந்தியத்தின் சி.ஐ.ஏ உயரதிகாரி ஆகியோர் அக்கொலைகளுக்குள் அடங்கும். அவர்களில் ஒருவர் கிரீஸ் பிரதமரின் சகலனாகும். எனவே, குபொர்டினாஸ் வேண்டுமென்றே மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

18 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் அவரை குறைந்த கட்டுப்பாடுகளுள்ள சிறையிலிருந்து கடும் கட்டுப்பாடுகளுள்ள சிறைக்கு மாற்றியது தவறென்றும் மீண்டும் முன்னைப் போலவே சிறைக்கு மாற்றவேண்டுமென்று எதிர்க்கட்சியும், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அமைப்பும் கோரி வருகிறது.

குபொர்டினாஸுக்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்களுடைய கணக்குகளைப் பேஸ்புக் முடக்கியிருக்கிறது. அத்துடன் அவரது படங்கள் பிரசுரிக்கப்படும்போது, ஆதரவாக ஊர்வலம் நடத்தும் படங்கள் பிரசுரிக்கும்போதும் பேஸ்புக் அவைகளை அகற்றிவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *