ஏஜியன் கடலின் பெயரை “தீவுகளின் கடல்” என்று மாற்றி அழைக்கிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.
கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் ஏஜியன் கடல் பகுதிகளில் கிரீஸும், துருக்கியும் நீண்ட காலமாக ஆதிக்கம் கோரி வருகிறார்கள். சைப்பிரஸ் நாட்டின் அரசியலில் இவ்விரண்டு நாடுகளில் ஆதிகம், அப்பிராந்தியத்திலிருக்கும் இயற்கை வளங்களின் மீதான உரிமை, சரித்திரகால ஜென்மப்பகை, மத வேறுபாடு ஆகியவைகளால் கிரீஸும், துருக்கியும் ஒருவரையொருவர் வெறுக்கும் நாடுகளாகவே இயங்கி வருகின்றன.
“கிழக்கு மத்தியதரைக்கடல், கருப்புக் கடல் பிராந்தியங்களில் துருக்கியின் தனியுரிமையை எவரும் கேள்வி கேட்க முடியாது,” என்று தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய எர்டகான் “ Aegean என்ற பெயர் கிரேக்கப் பெயராக இருப்பது Ege என்று மாற்றப்படவேண்டும்,” என்றார். Ege என்ற சொல் தீவுகளின் கடல் என்ற துருக்கியச் சொல்லாகும். அதுவே, அக்கடலின் பண்டைக்காலப் பெயராக இருந்தது என்றார் அவர்.
1922 இல் நடந்த கிரேக்க – துருக்கியப் போரில் தற்போதைய இஸ்மீர் [முன்று ஸ்மிர்னா என்றழைக்கப்பட்டது] நகரில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான கிரேக்கர்களை துருக்கி விரட்டியடித்தது. அதைப் பெருமையுடன் குறிப்பிட்ட எர்டகான் “எங்களது தென்கிழக்கு எல்லைகளில் அதையே நாம் மீண்டும் செய்யவேண்டும்,” என்றார்.
ஏஜியன் கடல் பிராந்தியத்திலிருக்கும் லெம்னோஸ் தீவுகளைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் துருக்கி தனது ஆராய்ச்சிக் கப்பல்களை அனுப்பி இயற்கை வளங்களைத் தேடி வருகிறது. அது சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று கிரீஸ் குற்றஞ்சாட்டி அப்பிராந்தியத்தில் தனது கடற்படையை ரோந்துக்கு அனுப்பியிருக்கிறது. அவைக்கு ஆதரவாக கிரேக்க வான்படையும் ரோந்து செய்கிறது.
கிரீஸின் அந்தக் கோரிக்கையை நீண்ட காலமாகவே மறுத்துவரும் துருக்கி கிரீஸ் தங்கள் உரிமைகளுக்குக் குறுக்கே வருவதாகக் குற்றஞ்சாட்டி வருவதால் இரு பாகத்தாரும் வாய்ச்சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். “எங்களைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும், எங்கள் கலாச்சாரம் இருக்கும் உலகின் சகல மூலை முடுக்குகளிலும் துருக்கி தனது இருப்பைக் காட்டிக்கொண்டேயிருக்கும்,” என்கிறார் எர்டகான்.
சாள்ஸ் ஜெ. போமன்