கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.
குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் சமூகங்களால் அப்படிப்பட்ட குற்றங்கள் நாட்டில் அதிகமாகி வருகிறது. அப்படியான நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டவையாகக் கருதப்படும் குற்றங்கள் பொலீசாரால் “கௌரவக் குற்றங்கள்,” என்று தனியாகப் பதியப்படுகின்றன.
குறிப்பிட்ட அக்குற்றங்களைப் பிரத்தியேகமாகக் கவனிப்பதன் மூலம் அதனால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குப் பிரச்சினை உண்டாகி வரும் ஆரம்ப காலத்திலிருந்தே அதற்கான நடவடிக்கைகளைப் பொலீசாரும், சமூக சேவை அமைப்பினரும் எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதாகும். அத்துடன் அக்குற்றங்களைச் செய்வது நியாயமானது என்று கருதும் சமூகங்களின் எண்ணத்தை மாற்றும் திட்டங்களில் ஈடுபடுவதுமாகும். இக்குற்றங்களைப் பிரத்தியேகமாகக் கண்காணிப்பது 2019 முதல் ஆரம்பிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்